Published : 19 Jan 2022 07:30 AM
Last Updated : 19 Jan 2022 07:30 AM

மாற்றுத் திறனாளி மரணத்துக்கு காரணமான காவலர்களை கைது செய்ய வேண்டும்: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் வலியுறுத்தல்

சென்னை: மாற்றுத் திறனாளி பிரபாகரன் மரணத்துக்குக் காரணமாக இருந்த காவலர்களைக் கைது செய்ய வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைவர் பா.ஜான்சிராணி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சேலம் - ஓமலூர் தாலுகா கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஏ.பிரபாகரன், சேந்தமங்கலம் காவல்துறை விசாரணையில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை அறிந்து அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி முதல்வர் அறிவித்துள்ளதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

பிரபாகரன் மரணம் தொடர்பான குற்றத்தில் 3 போலீஸார் மட்டுமே இதுவரை தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது போதுமானது அல்ல. இதில் சம்பந்தப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும், வன்கொடுமை, கொலை குற்றப் பிரிவுகளில் குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும். விசாரணை நேர்மையாக நடைபெற, குற்றம் புரிந்த போலீஸாரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துவிட்டு விசாரணையைத் தொடங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்கவும், அதுவரையிலும் வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின்படி, வாழ்வாதாரம் மற்றும் வழக்கு நடைபெற்று முடியும் வரை போக்குவரத்து உதவித்தொகை உள்ளிட்டவை மாவட்ட நிர்வாகம் வழங்கிடவும் உத்தரவிட வேண்டும். விரைவு நீதிமன்றம் ஒன்றில் வழக்கை விரைந்து நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x