Published : 18 Jan 2022 09:07 AM
Last Updated : 18 Jan 2022 09:07 AM

குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி பங்கேற்பதை உறுதி செய்க: முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைபபாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

இந்திய அரசமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளான ஜனவரி 26-ஆம் நாள் இந்தியக் குடியரசு தினமாக புது டெல்லியிலும் மற்றும் இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொண்டாடப்படுகிறது. புது டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்கள்.

இதனைத் தொடர்ந்து இராணுவத்தினரின் வீரசாகசங்கள் நடைபெறும். பின்னர் சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். இதன் தொடர்ச்சியாக, மாநிலங்களின் கலை, கலாச்சாரம், மற்றும் தனித் தன்மையை எடுத்துரைக்கும் வண்ணம் அலங்கார ஊர்திகள் பங்கேற்பது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில், கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிட்டு பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கு பெறவிருந்த அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், தென் இந்தியாவிலிருந்து கர்நாடக அரசின் ஊர்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வந்துள்ளது வருத்தத்தினை அளித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கரோனா தொற்று நோய் காரணத்தைக் காட்டி ஹஜ் புனிதப் பயணத்திற்கு மேற்கொள்ள குறிப்பிட்டுள்ள விமான நிலையங்களின் பெயர் பட்டியலில் சென்னை விமான நிலையத்தின் பெயர் நீக்கப்பட்டது. ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்ளும் நடைமுறை தொடர வேண்டும் என வலியுறுத்தி நான் பிரதமருக்கு 14-11-2021 நாளிட்ட கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தேன். தமிழக முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில் தற்போது டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழ்நாடு இடம்பெறவில்லை என்ற தகவல் வந்துள்ளது. இந்தியாவில் 28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 37 இருந்தாலும், பொதுவாக குடியரசு தின விழாவின்போது 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சார்பாகத்தான் அலங்கார ஊர்திகள் பங்கேற்கும். அதாவது, சாதாரண சூழ்நிலைக்கும், கரோனா நோய்த் தொற்று இருக்கின்ற சூழ்நிலைக்கும் உள்ள வித்தியாசம் வெறும் நான்குதான். எனவே, தமிழ்நாட்டினுடைய கலை, கலாச்சாரம், பண்பாடு, விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆகியவற்றை மத்திய அரசிடம் விளக்கி அனுமதியை பெற்றே ஆக வேண்டும்.

பொதுவாக, ஹஜ் பயணிகள் புறப்படுமிடத்தை தேர்வு செய்தல், அலங்கார ஊர்திகளை இடம்பெறச் செய்தல் போன்ற முடிவுகள் எல்லாம் அதிகாரிகள் மற்றும் அதற்கான குழுக்கள் மட்டத்தில் எடுக்கக்கூடிய ஒன்று. எனவே, இந்தியாவின் பிரதானமான நான்கு நகரங்களில் சென்னை ஒன்று என்பதையும், இந்தியாவிலுள்ள மிகப் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று என்பதையும், தமிழ்நாட்டின் கலை, கலாச்சாரம், பண்பாடு, விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆகியவற்றை மாநில அரசு அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசு அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறி, அதிகாரிகள் மட்டத்திலேயே அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒருவேளை அதில் ஏதாவது சிரமம் இருந்தால், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை ஐக்கிய நாடுகள் அவையில் எடுத்துரைத்து, இதுதான் தன்னுடைய வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணம் என்று கூறி, தமிழ் மொழியின் சிறப்பை ஆங்காங்கே போற்றிவரும் பிரதமரின் கவனத்திற்கு நேரடியாக எடுத்துச் சென்று பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணவேண்டும்.

குடியரசு தின விழா அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழ்நாட்டை சேர்ப்பதைப் பொறுத்த வரை, அதன் அவசரத் தன்மையைக் கருதி முதல்வர், பிரதமருக்கு நேற்று விரிவாகக் கடிதம் எழுதியுள்ளார். இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஆதரவினை நல்கும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முதல்வர், இந்தியப் பிரதமரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருகின்ற குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் சார்பாக அலங்கார ஊர்தி பங்கேற்பதையும், ஹஜ் புனிய யாத்திரைக்கான விமான நிலையப் பட்டியலில் சென்னை சேர்க்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x