Published : 18 Jan 2022 12:05 PM
Last Updated : 18 Jan 2022 12:05 PM

குடியரசு தின அணிவகுப்புக்கான அலங்கார வாகனங்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி? 

சென்னை: குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் அணிவகுப்புக்கான மையக் கருத்து உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் தங்கள் அலங்கார வாகனங்களின் மாதிரிகளை அனுப்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தும். அதன்படி, அனைத்து மாநிலங்களும் 10-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை தயாரித்து புகைப்படம் அல்லது வரைகலை வடிவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழுவிடம் டெல்லியில் நேரடியாக வழங்குவார்கள். அத்துடன், அதில் இடம்பெறும் தலைவர்கள் படம், இதர விவரங்கள் அனைத்தையும் விளக்குவார்கள்.

அதில் மாற்றங்கள் செய்ய அதிகாரிகள் குழுவினர் அறிவுறுத்தினால், தமிழக செய்தித் துறை அதிகாரிகள் அங்கேயே மாற்றங்கள் செய்து காட்டுவார்கள். இப்படி மத்திய அரசு அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படும் வரை மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதியாக ஒரு வடிவம் முடிவு செய்யப்படும். அதன்பிறகு, அலங்கார வாகனம் தயாரிக்கப்படும். இது வழக்கமான நடைமுறை.

தற்போதும் இதுபோல சுதந்திரப் போராட்டம் அடிப்படையில் புகைப்படங்களுடன் கூடிய அலங்கார வாகனம் தொடர்பான மாதிரி படம் தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்ட நிலையில், 3 சுற்றுகளாக அதில் மாற்றங்கள் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

4-வது சுற்றுக்கு தமிழக வாகனம் தேர்வு செய்யப்படுவது தொடர்பான தகவல் கிடைக்காத நிலையில், அதிகாரிகள் கேட்டபோது, கரோனா பரவல் காரணமாக அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆனால், பாரதியார் தவிர வஉசி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரை பற்றி யாருக்கும் தெரியாது என்பதாலேயே தமிழக அரசின் வாகனம் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா: குடியரசு தினவிழா அணிவகுப்பில் பாஜக ஆளுங்கட்சியாக இல்லாத மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. அந்த வகையில், வஉசி, பாரதியார், வேலு நாச்சியார் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்கள் உள்ளடக்கிய தமிழக அரசின் அலங்கார ஊர்தியும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு இந்த முடிவை உடனடியாக கைவிட்டு அனைத்து மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இடம்பெற அனுமதிக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: மத்திய பாஜக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படாமல் மாநில பெருமைகளை பறைசாற்றும் வகையில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் ஊர்திகளும் அணிவகுப்பில் பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இது ஏழரை கோடி தமிழ் மக்களை அவமதிக்கும் செயல். இது கூட்டாட்சி கொள்கைக்கு வேட்டு வைக்கும். குடியரசு தினநாள் அணிவகுப்பு எனில் அனைத்து மாநிலங்களின் ஊர்திகளும் கட்டாயம் இடம்பெற வேண்டும். அந்த உரிமையை மறுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை.

பாமக நிறுவனர் எஸ்.ராமதாஸ்: இந்திய விடுதலைக்கு போராடிய வஉசி, பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரை வெளிநாட்டு தலைவர்களுக்கு தெரியாது என்று கூறுவது தவறான வாதம். மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொண்டு தமிழக அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மத்திய அரசு டெல்லியில் நடத்தும் குடியரசுத் தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியும் அணிவகுக்கக் கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழக ஊர்தியும் இடம்பெறுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்குவதுதான் இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட தமிழ மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதாக அமையும்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா: பாரதியார், சிதம்பரனார், வேலுநாச்சியார் உள்ளிட்டோரை வெளிநாட்டவர்கள் யாரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற ஒரு காரணத்தை கூறி தமிழக அலங்கார ஊர்திக்கு மறுப்பு தெரிவித்திருப்பது வெட்கத்துக்குரியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்களின் மனங்களை புண்படுத்தும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரும், வெள்ளையருக்கு எதிராகப் போர்க் குரல் கொடுத்து களத்தில் நின்ற வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோர் கொண்ட ஊர்திகளுக்கு இடமில்லை என்று மறுக்கப்பட்டு இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

மேலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார், தமிழ்த் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்டோரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x