Published : 21 Apr 2016 08:52 AM
Last Updated : 21 Apr 2016 08:52 AM

திமுக தலைவர் கருணாநிதியுடன் காங்கிரஸ் வேட்பாளர்கள், குஷ்பு சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு மற்றும் சில காங்கிரஸ் வேட்பாளர்கள் நேற்று சந்தித்து பேசினர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டி யிடுகிறது. இதில் 33 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் டெல்லியில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட ராயபுரம் வேட்பாளர் மனோகர், அம்பத்தூர் வேட்பாளர் ஹசன் மவுலானா, திருத்தணி வேட்பாளர் சிதம்பரம், முதுகுளத்தூர் வேட்பாளர் மலேசியா பாண்டியன் ஆகியோர் நேற்று கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்களுடன் காங்கிரஸ் கட்சி ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, பொதுச் செயலாளர் எம்.ஜோதி ஆகியோரும் கருணாநிதியை சந்தித்தனர்.

தன்னை சந்தித்த வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த கருணாநிதி, தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். கருணாநிதியிடம் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களது தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வருமாறு கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான குஷ்பு நேற்று மாலை கருணாநிதியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

திமுக தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். திமுக கூட்டணி இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, நான் தேர்தல் பிரச்சாரம் செய்ய செல்வேன். அதிமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்வேன்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x