Published : 09 Apr 2016 03:55 PM
Last Updated : 09 Apr 2016 03:55 PM

தமிழகத்தில் இயற்கை வளம் கொள்ளை போகிறது: சீமான் குற்றச்சாட்டு

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் இயற்கை வளம் கொள்ளை போகிறது. இதைத் தடுக்க திராவிடக்கட்சிகள் முயற்சி எடுக்கவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

வேலூர் மாவட்டத்தில் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில் நேற்று நடைபெற்றது. ஆம்பூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட உள்ள கலை காமராஜனை அறிமுகம் செய்து வைத்து கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

தமிழகத்தை ஆளும் திறமை, தமிழனுக்கு இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. தமிழகத்தில் கனிம வளம், நீர் வளம், இயற்கை வளம் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. மணல் கடத்தலில் மட்டும் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகள் இயற்கை வளம் கொள்ளை போவதை தடுக்க முன் வரவில்லை. மாறாக விவசாயத்தை பாதிக்கக் கூடிய மீத்தேன், கெயில் போன்ற திட்டங்கள் கமிஷனுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் தமிழ் இனத்தை அடிமையாக்கி வருகின்றனர். இலங்கையில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு திராவிட கட்சிகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றார்.

அதேபோல், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.

நிகழ்ச்சியில், மண்டலப் பொறுப்பாளர் சோழன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசபாண்டியன், ஆம்பூர் நகரச் செயலாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x