Last Updated : 20 Apr, 2016 10:31 AM

 

Published : 20 Apr 2016 10:31 AM
Last Updated : 20 Apr 2016 10:31 AM

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை நிராகரித்தது மத்திய அரசு

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

முதல் கடிதம் கடந்த 2014-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அனுப்பப்பட்டது. அந்தக் கடிதம் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் தமிழக அரசின் முடிவு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு உள் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "தமிழக அரசு அனுப்பியிருந்த கடிதம் குறித்து சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை நிராகரிப்பதாக தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம்" என்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடந்த மார்ச் 2-ம் தேதி கடிதம் எழுதியது.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் இக்கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

தமிழக அரசு அனுப்பிய கடிதத்தின் முழு விவரம்:

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 18-02-2014 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய 4 பேரையும் சேர்த்து மொத்தம் 7 பேரை விடுதலை செய்வது என தமிழக அரசு முடிவெடுத்தது.

இந்த வழக்கின் புலன் விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்ட காரணத்தால், மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தும் முன் மத்திய அரசுடன் கலந்தாலோசிப்பது அவசியம். இதன் காரணமாக மத்திய அரசின் கருத்தை கேட்டு 19-02-2014 அன்று தமிழக அரசு கடிதம் அனுப்பியது. மத்திய அரசின் கருத்தை 3 தினங்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டிருந்தோம்.

எனினும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பான தனது கருத்தை தெரிவிப்பதற்கு பதிலாக, தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 25-04-2014 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரத்தில் விடை காண வேண்டிய சட்டரீதியான 7 கேள்விகளை முன்வைத்தது. அதன் பிறகு 02-12-2015 அன்று இந்த கேள்விகளுக்கு விடையளித்த 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, அதன் அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு பற்றி விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து 3 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. எனினும், இதுவரை வழக்கு விசாரணைக்கே வராமல் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த 7 பேரில் முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இந்த சூழலில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 435-வது பிரிவின்படி அவசியம் என்பதால், தமிழக அரசின் இந்த முடிவு குறித்து மத்திய அரசின் கருத்தை தெரிவிக்குமாறு கோரி இந்த கடிதத்தை அனுப்புகிறோம். .

இதற்கிடையே, மத்திய அரசின் கருத்தை கேட்டுள்ளதால், 02-12-2015 அன்று உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வு பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்யும் தமிழக அரசின் உரிமை பாதிக்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.

இவ்வாறு ஞானதேசிகன் தனது கடிதத்தில் கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x