Published : 11 Jan 2022 07:08 PM
Last Updated : 11 Jan 2022 07:08 PM

கரோனா கட்டுப்பாடுகளால் கரும்பு கொள்முதல் முன்பதிவுகளை ரத்து செய்யும் வியாபாரிகள்: பரிதவிப்பில் விவசாயிகள்

உத்தமபாளையம் (தேனி மாவட்டம்): கரோனா கட்டுப்பாடுகளால் கரும்பு கொள்முதல் முன்பதிவுகளை வியாபாரிகள் ரத்து செய்ததால் விவசாயிகள் பரிதவிப்பில் தள்ளப்பட்டுள்ளனர்.

கரோனா கட்டுப்பாடுகளினால் கரும்புகளின் விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்முதலுக்காக முன்பதிவு செய்திருந்த கரும்புகளை வியாபாரிகள் ரத்து செய்து வருகின்றனர். இதனால் விலை வீழ்ச்சி ஏற்பட்டு கரும்புகள் தோட்டத்தில் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர், உத்தமபாளையம், கோட்டூர், தேவதானப்பட்டி, கூழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது.

சின்னமனூரைச் சேர்ந்த விவசாயி ராஜாங்கம்

தைப் பொங்கலன்று கரும்புகளின் தேவை அதிகம் இருக்கும் என்பதால் அதற்கேற்ப இதனை சாகுபடி செய்வர். கடந்த மாத இறுதியில் இருந்தே கரும்பு மகசூல் பருவத்திற்கு வந்துள்ளது. பொங்கலுக்கு கரும்புகளின் தேவை அதிகம் இருக்கும் என்பதால் திருநெல்வேலி, தென்காசி, ராஜபாளையம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் தேனி மாவட்டத்திற்கு வந்து விளைந்த கரும்புகளைப் பார்வையிட்டு முன்பணம் கொடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் கரோனா, ஒமைக்ரான் பரவலால் அடுத்தடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிறன்று முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை வழிபாட்டுத் தலங்களை மூடவும், 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வப்போது கட்டுப்பாடு குறித்த தகவல்களும் அரசு வெளியிட்டு வருகிறது. இதனால் கரும்புகளின் தேவை குறைந்து விற்பனை பாதிக்கும் என்பதால் வியாபாரிகள் கொள்முதல் முன்பதிவுகளை ரத்து செய்து வருகின்றனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "தை முதல்வாரத்தில்தான் கரும்புகளின் விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பொங்கல் கொண்டாட்டம், வழிபாடுகளை மேற்கொள்ள முடியாததால் விற்பனை பாதிக்கும். எனவே குறைவாகவே கொள்முதல் செய்கிறோம்" என்றனர்.

சின்னமனூரைச் சேர்ந்த விவசாயி ராஜாங்கம் கூறுகையில், "இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்தது. கடந்த மாத இறுதியில் உள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் தோட்டத்திற்கு வந்து முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், பலரும் தற்போது இதனை ரத்து செய்து வருகின்றனர். 10 லோடு கேட்ட இடத்தில் 4 லோடுகளையே எடுத்துச் செல்கின்றனர். இதனால் பல தோட்டங்களில் கரும்புகள் வெட்டப்படாமலே உள்ளன. பொங்கலுக்குள் கரும்புகளை விற்க வேண்டும் என்பதால் கிடைத்த விலைக்கு விற்க வேண்டிய நிலை உள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x