Published : 11 Jan 2022 02:06 PM
Last Updated : 11 Jan 2022 02:06 PM

மதுரையில் கருணாநிதி நினைவு நூலகம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை : மதுரையில் அமைக்கப்படவுள்ள கருணாநிதி நினைவு நூலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

"எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், படைப்பாளி, அரசியல், ஆட்சி என எத்துறையைத் தொட்டாலும், அத்துறையில் முத்திரை பதித்த மாபெரும் தலைவர் கருணாநிதி அவரின் பெருமையைப் போற்றும் விதமாக, முதல்வர் ஸ்டாலின், கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு 3.6.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பதின் மீதும் வாழ்நாள் முழுவதும் தீராப் பற்றினை கொண்ட கருணாநிதி, 2010ம் ஆண்டில் பேரறிஞர் அண்ணாவின் 102வது பிறந்தநாள் அன்று சென்னை, கோட்டூர்புரத்தில், ஆசியாவின் அதிநவீன மிகப் பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.

சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக இந்த நூலகம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில், கருணாநிதி நினைவு நூலகம் இரண்டு லட்சம் சதுரஅடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும்’ என்று அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப் பணித் துறை வளாகத்தில் 2.70 ஏக்கர் நிலத்தில், 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,13,288 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்படவுள்ள அடித்தளத்துடன் கூடிய 8 தளங்கள் கொண்ட கருணாநிதி நினைவு நூலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (11.1.2022) தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

கருணாநிதி நினைவு நூலகத்திற்குத் தேவையான நூல்கள், மின்நூல்கள் இணையவழி பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு ரூபாய் 10 கோடியும், தொழில் நுட்ப சாதனங்கள் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசால் ரூபாய் 5 கோடியும் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நூலகம், மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள், பள்ளிச்சிறார்கள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்."

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x