Last Updated : 10 Jan, 2022 11:24 AM

Published : 10 Jan 2022 11:24 AM
Last Updated : 10 Jan 2022 11:24 AM

குமரி மாவட்டத்தில் இந்துக்கள் சிறுபான்மையினர் மக்கள் தொகை கணக்கெடுப்பு - ‘கிரிப்டோ - கிறிஸ்தவர்களை’கணக்கில் கொள்ளவில்லை: உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து

மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர் என்ற நிலவரம் மக்கள்தொகை கணக்கெடுப்பில் பிரதிபலிக்கவில்லை. அந்த மாவட்டத்தில் உள்ள ‘கிரிப்டோ-கிறிஸ்தவர்களின்' எண்ணிக்கையை கணக்கில் கொள்ளவில்லை என உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.

குமரி மாவட்டம் அருமனையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம்கிறிஸ்தவ இயக்கம் நடத்திய கூட்டத்தில் பங்குத்தந்தை ஜார்ஜ்பொன்னையா பேசினார். அந்தக் கூட்டத்தில் பிரதமர், உள்துறைஅமைச்சர், தமிழக அமைச்சர்கள்மற்றும் எம்எல்ஏக்களை அவதூறாக பேசியதாக அருமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: கன்னியாகுமரி மாவட்டத்தில் 1980-க்குப் பிறகு இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து சிறுபான்மையினராக மாறிவிட்டனர். இந்த கள நிலவரத்தை 2011-ம்ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரதிபலிக்கவில்லை. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இந்துக்களில் பலர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பிறகும் இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக தங்களை இந்துக்களாக ஆவணங்களில் காட்டியுள்ளனர். அவர்கள் இந்துக்கள் என்று சொல்லி சலுகைகளை பெற்றுக் கொண்டு உண்மையில் கிறிஸ்தவர்களாக இருந்து வருகின்றனர்.

அவர்கள் ரகசிய கிறிஸ்தவர்கள் (கிரிப்டோ- கிறிஸ்தவர்கள்.) இந்த பட்டியலில் ஒரு நீதிபதியும் இருந்தார். மரியாதை நிமித்தமாக அவருடைய பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. அவருடைய மத அடையாளம் குறித்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எல்லோரும் தங்களுக்கு உண்மை தெரியாததுபோல் நடித்தனர். ஆனால் அவர் இறந்த பிறகு அவருடைய இறுதிச் சடங்கு கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.

எச்சரிக்கை விடுத்தார்

அரசின் புள்ளிவிபர கணக்கு ஒருபுறம் இருந்தாலும், மனுதாரர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் 62 சதவீதத்தை தாண்டிவிட்டனர் என்று தெரிவிக்கிறார். அதுமட்டுமல்லாமல் வெகு விரைவில் கிறிஸ்தவர்கள் 72 சதவீதமாக உயர்ந்து விடுவார்கள் என்று சவால்விட்டு பேசியுள்ளார். அவருடைய பேச்சின்மூலம் இந்துக்களை எச்சரிப்பதுடன், கிறிஸ்தவம் வளர்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய வெறுப்பு பேச்சுகள் நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பாதிக்கும். பிரிவினைக் கலவரங்கள், லட்சக்கணக்கான உயிரிழப்புகளுக்கு பிறகு கிடைத்த சுதந்திரத்தில் மதச்சார்பற்ற தன்மையை நம் முன்னோர் உணர்வூர்வமாக ஏற்றுக் கொண்டனர். மதத்தின் அடிப்படையில் இந்தியா பிரிக்கப்பட்டபோது நடந்த கலவரத்தில் லட்சக்கணக்கானோர் இறந்தனர்.

மதம் சார்ந்த மக்கள்தொகை

அதனால்தான் இந்தியாவை மதச்சார்பின்மை நாடாக நம் தலைவர்கள் உருவாக்கினர். மதச்சார்பின்மை கொள்கையை உணர்வுபூர்வமாக நமது தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவர்களால் முன்மொழிந்த கருத்தில் முக்கியமானது மதம் சார்ந்த மக்கள்தொகை அப்படியே தொடர வேண்டும் என்பதுதான்.

ஒருவருடைய மதத்தைப் பின்பற்றுவதையும், பிரச்சாரம் செய்வதையும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமை அனுமதிக்கிறது. ஒருவர் தனது தனிப்பட்டநம்பிக்கையின் அடிப்படையில், தனது மதத்தை மாற்ற விரும்பினால், அவரது விருப்பத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். அதே நேரத்தில் மத மாற்றம் என்பது ஒரு குழு நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியாது.

ஒருங்கிணைந்த கலாச்சாரம்

திலீப்குமார் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறினார். யுவன் ஷங்கர் ராஜா இப்போது ஒரு முஸ்லிம். டி ராஜேந்தரின் மகன்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவியுள்ளார். இவை முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடியவை. இதற்காக மத மாற்றம் ஒரு குழு பிரச்சாரமாக மாறிவிடக் கூடாது. நமது அரசியலமைப்புச் சட்டம் ஒருங்கிணைந்த கலாச்சாரத்தைப் பற்றி பேசுகிறது. இது தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும்.

மதம் சார்ந்த மக்கள்தொகை 2022-ம் ஆண்டின் நிலவரப்படியே தொடர வேண்டும். இந்த நிலை சீர்குலைந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும்.

இவ்வாறு தெரிவித்த நீதிபதி மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x