Published : 10 Jan 2022 10:31 AM
Last Updated : 10 Jan 2022 10:31 AM

புதிய ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்காததை கண்டித்து கோவை, திருப்பூரில் விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம்: நாளொன்றுக்கு ரூ.50 கோடி உற்பத்தி பாதிப்பு

பல்லடத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தொழிலாளர்கள் இன்றி காணப்படும் விசைத்தறிக்கூடம்.

திருப்பூர்/கோவை

புதிய ஒப்பந்தப்படி அறிவிக்கப்பட்ட கூலி உயர்வு வழங்கப்படாத நிலையில், கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் நேற்றுமுதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் இரண்டரை லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. கூலிக்கு நெசவு செய்யும்விசைத்தறி உற்பத்தியாளர்கள் 35,000 பேரும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இத்தொழிலை நம்பி உள்ளனர். காலமாற்றம், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஜவுளிஉற்பத்தியாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட சதவீத கூலி உயர்வை பெற்றுத் தருவதற்காக கடந்த 1992-ம் ஆண்டு தொடங்கி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் கூலி உயர்வு ஒப்பந்தம் சரிவர கடைபிடிக்கப்படவில்லை.

பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு கடந்த நவம்பர் மாத இறுதியில் கூலி உயர்வு ஒப்பந்தம் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்களுக்கு மத்தியில் கையெழுத்தானது. புதிய கூலி உயர்வு ஒப்பந்தப்படி கடந்த 2014-ம் ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தத்தில் இருந்து டிசம்பர் 1-ம் தேதி முதல் சோமனூர் ரகத்துக்கு 23 சதவீதமும், இதர ரகங்களுக்கு 20 சதவீதமும் கூலி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த கூலி உயர்வையும் ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்காததால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறியாளர்கள் நேற்று தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க செயலாளர் எம்.பாலசுப்ரமணியம் கூறும்போது, ‘‘கடந்த நவம்பர் மாத இறுதியில் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தப்படி கூலி உயர்வு இதுவரை வழங்கப்படாத நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும்விசைத்தறியாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நாளொன்றுக்கு ரூ.50 கோடி மதிப்பில் துணி உற்பத்தி பாதிக்கப்படும். இவ்விவகாரத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களும், அரசும்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x