Last Updated : 09 Jan, 2022 07:02 PM

 

Published : 09 Jan 2022 07:02 PM
Last Updated : 09 Jan 2022 07:02 PM

புதுச்சேரியில் கரோனாவுக்கு 20 வயதுக்குட்பட்ட இளையோர் தினசரி 15 சதவீதம் பேர் பாதிப்பு: சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்  

புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனாவுக்கு 20 வயதுக்குட்பட்ட இளையோர் தினசரி 15 சதவீதமும், 30 வயதுக்குட்பட்டோர் 30 சதவீதமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனப் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஒற்றை இலக்கில் இருந்த கரோனா தினசரி பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 9 நாட்களில் 1,244 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றில் தற்போது தினசரி 20 வயதுக்குட்பட்ட இளையோர் 15 சதவீதம் பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. 20-30 வயதுடையோர் 30 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதன்படி தினமும் கரோனாவுக்கு இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு கூறுகையில், ‘‘புதுச்சேரியில் கரோனாவுக்கு 0-20 வயது வரை 15 சதவீதம், 20-30 வயது வரை 30 சதவீதம், 31-40 வயது வரை 15 சதவீதம், 50-க்கும் மேல் 14 சதவீதம் பேர் என தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதில் பள்ளி மாணவர்களும் அடங்குவர். அவர்கள்தான் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுகின்றனர். கரோனாவைத் தடுக்க முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்வது முக்கியமானது.

பலர் முகக்கவசம் சரிவர அணிவதில்லை. இதுதான் தொற்று பரவக் காரணமாக இருக்கிறது. எனவே, கரோனா விதிகளைக் கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும். இதுவரை புதுச்சேரியில் 2 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 140 ஒமைக்ரான் அறிகுறி தென்பட்ட 140 பேரின் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் இன்னும் வரவில்லை.

ஆனால், அறிகுறிகளைப் பார்த்தால் ஒமைக்ரான் இருக்க வாய்ப்பு அதிகம். லேசான தொற்றாகத்தான் இருக்கிறது. மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது போன்று இல்லை. 3, 4 நாட்களில் குணமாகி வீடு திரும்பி விடுகின்றனர்’’என்று இயக்குநர் ஸ்ரீராமலு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x