Published : 08 Jan 2022 08:11 PM
Last Updated : 08 Jan 2022 08:11 PM

ஞாயிறு முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி?

சென்னை: கரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக, தமிழகத்தில் நாளை (ஞாயிறு) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் எதற்கெல்லாம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களைப் பார்க்கலாம்.

அனுமதி

* 9-1-2022 அன்று முழு ஊரடங்கின்போது, பால், செய்தித்தாள் விநியோகம், மருத்துவம் சார்ந்த பணிகள் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது அரசு.

* உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி. என்றாலும் உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

* அதேபோல் முழு ஊரடங்கு நாளில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு உணவு விநியோகிக்க உணவகங்களுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

* விமானம், ரயிலில் பயணிப்பதற்காக விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்குச் செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஆனால், பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

* நாளை ஏற்கெனவே திட்டமிட்டபடி நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு சிறப்பு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.

* ஏற்கெனவே திட்டமிடப்பட்ட திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு. நிகழ்ச்சிக்குச் செல்பவர்கள் திருமண அழைப்பிதழ்களைக் காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

தடை:

* முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* மார்க்கெட், கடற்கரைப் பகுதிகள், கடைவீதிகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் என எதுவும் நாளை இயங்காது.

* வண்டலூர் உயிரியல் பூங்காவைப் பார்வையிடப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

* நாளை தமிழகம் முழுவதும் பெரும்பாலான போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் மட்டும் 10,000 போலீஸார் கண்காணிக்க உள்ளனர். மேலும் `ட்ரோன் கேமரா' மூலம் ஊரடங்கு கண்காணிக்கப்பட உள்ளது.

* அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x