Published : 08 Jan 2022 02:55 PM
Last Updated : 08 Jan 2022 02:55 PM

நீட் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த அவசர சட்டம்: விசிக வலியுறுத்தல்

திருமாவளவன் | கோப்புப் படம்.

சென்னை: தனியார் நீட் பயிற்சி மையங்களில் மாணவர்களிடம் ரூ.5750 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த அவசர சட்டம் கொண்டுவரவேண்டும் என தமிழக அரசிடம் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தியுள்ளது.

நீட் தேர்வில் விலக்கு தொடர்பாக விவாதிப்பதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கலந்துகொண்டது.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நீட் தேர்வில் விலக்கு கோரும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் முடக்கி வைத்துள்ளார். இந்நிலை குறித்து விவாதிப்பதற்கு தமிழக முதல்வர் தலைமையில் 08.01.2022 அன்று கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள்:

1. தமிழக சட்டப்பேரவையில் 13. 9. 2021 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்புமாறு ஆளுநரிடம் வழங்கப்பட்ட Tamilnadu Admission to Undergraduate Medical Degree Courses Bill, 2021 என்னும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் எவ்வித காரணமுமின்றி முடக்கி வைத்துள்ள தமிழக ஆளுநரின் செயல் தமிழக சட்டப்பேரவையையும், தமிழக அரசையும், தமிழக மக்களையும் அவமதிப்பதாகும். இவ்வாறு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

2. அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணான தமிழக ஆளுநரின் நடவடிக்கை குறித்து முறையிடுவதற்காக நேரம் ஒதுக்குமாறு கேட்ட அனைத்துக் கட்சி குழுவினருக்கு நேரம் ஒதுக்காமல் ஒரு வார காலம் டெல்லியில் காத்திருக்கச் செய்து அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

3. நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டம் ஆகும் வரை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடரும் என்பதால் தமிழ்வழியில் தேர்வு எழுதி நீட் தேர்வில் தகுதிபெறும் ஏழை எளிய எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி சேருவதற்கு ஏதுவாக அவர்களுக்கு அரசே அந்த கட்டணம் முழுவதையும் வட்டியில்லா கடனாக வழங்குவதற்கு 'கடன் படிப்பு உதவித் தொகை' ( Loan Schiolarship Scheme) திட்டமொன்றை வகுத்திட வேண்டும். அவ்வாறு கடன் உதவி பெறும் மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும் என வரம்பு நிர்ணயிக்கலாம்.

4. தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தமிழகத்தில் 400க்கும் அதிகமான தனியார் நீட் பயிற்சி மையங்கள் ஆண்டுக்கு சுமார் ரூ.5750 கோடி சம்பாதிப்பதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் 99% பேர் இந்தப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்கள். இந்த மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்த எந்தவொரு சட்டமும் நமது மாநிலத்தில் இல்லை. அத்துடன் இந்த மையங்களால் நீட் தேர்வர்களிடையே சமனற்ற நிலை உருவாகிறது. எனவே இந்தப் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த அவசர சட்டம் ஒன்றைத் தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும்.

5. நீட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள் சுமார் 15% பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். நீட் தேர்வு வந்ததற்குப் பிறகு தமிழ்வழியில் படித்த மாணவர்களில் 2%க்கும் குறைவானவர்களே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ளது. எனவே, தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் நீட் பயிற்சி மையங்களில் தமிழ்வழியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை தருவதோடு அவற்றின் தரத்தை தனியார் பயிற்சி மையங்களின் அளவுக்கு உயர்த்துவதற்கு அவசரகால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 'ஆன் லைன்' பயிற்சி வகுப்புகளுக்குப் பதிலாக நேரடி வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.

இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x