Published : 08 Jan 2022 06:48 AM
Last Updated : 08 Jan 2022 06:48 AM

கூட்டுறவு சங்க இயக்குநர்களின் பதவிக்காலம் 3 ஆண்டாக குறைப்பு; பேரவையில் மசோதா நிறைவேற்றம்: எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு

சென்னை: கூட்டுறவு சங்க இயக்குநர்கள் குழுவின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வகை செய்யும் சட்டமுன்வடிவு பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் கூட்டுறவுச் சங்க இயக்குநர்கள் குழுவின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வகை செய்யும் சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி நேற்று அறிமுகம் செய்தார். இந்தசட்ட முன்வடிவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு இந்த சட்ட முன்வடிவு பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

முறைகேடு புகார்கள்

இந்த சட்ட முன்வடிவில் கூறப்பட்டிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களில் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்தும், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களிடம் இருந்தும் பல புகார்கள் வரப்பெற்றுள்ளன. கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டதில் அதிக அளவிலான நிதி முறைகேடுகளும், போலி நகைகள் மீதான கடன்கள் மற்றும் கோடிக்கணக்கில் போலிக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது போன்றவை வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளன.

எனவே, கூட்டுறவு சங்கங்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில், அவற்றின் நிர்வாகங்களை நெறிப்படுத்தவும் முறையான ஆளுகையை உறுதி செய்யவும், கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளின் திறனை அதிகரிக்கவும், சங்கங்களின் இயக்குநர்கள் குழுவின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

அத்துடன் ஒரு சட்டத்தை மேற்கொள்வதன் மூலம் இந்தியஅரசியலமைப்பின் 9-பி பகுதி யின் வகைமுறைகளுடன் இசைந்து செய்யப்பட்ட திருத்தங்களுக்கு முந்தைய 1983-ம் ஆண்டு கூறப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் இருக்கும் சில வகைமுறைகளை மீட்டெடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவானது மேற்சொன்ன முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பார்வை குன்றிய நபர்கள்

அமைச்சர் இ.பெரியசாமி தாக்கல் செய்த மற்றொரு சட்டமுன்வடிவில், ‘கண்பார்வை குன்றிய நபர்கள், உடல் ஊனம் என்பதால் எழுத முடியாதவர்கள் ஆகியோரை பதிவுபெற்ற கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது நியமனம் செய்வதற்கு தகுதியானவர்களாக்கும் வகையில் உரிய திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு, செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியதாவது: ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலம் உள்ள கூட்டுறவு சங்கங்களை 3 ஆண்டாக குறைத்து சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது. கூட்டுறவுசங்க தேர்தலை நடத்துவதற்கு தனி ஆணையம் உள்ளது. அதன்மூலமாகத்தான் கூட்டுறவு சங்கஇயக்குநர்கள், தலைவர்கள் முறையாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஒரு கூட்டுறவு சங்கத்தில் தவறு ஏதும் நடந்தால், சட்டப்படி விசாரித்து அந்த கூட்டுறவு சங்கத்தை மட்டுமே நீக்க முடியும். சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் கூட்டுறவு சங்கங்களை வேண்டுமென்றே சட்டவிரோதமாக திட்டமிட்டு கலைக்கிறார்கள். இதற்கு சட்டத்தில் இடமில்லை.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

தமிழகத்தில் அனைத்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களும் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு இருக்கும்போது அனைத்து கூட்டுறவு சங்கங்களின் ஆயுட்காலத்தை குறைக்கும் செயல் ஜனநாயகப் படுகொலை ஆகும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிறப்பாக செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களை திமுக அரசு கலைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x