Published : 07 Jan 2022 11:44 AM
Last Updated : 07 Jan 2022 11:44 AM

கொடைக்கானல் அருகே பழங்குடியின மக்களின் இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கொடைக்கானல் மலைப்பகுதி வாழைகிரியில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள்.

கொடைக்கானல்

கொடைக்கானல் அருகே அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்யும் தனி நபர்களை கண்டித்து பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளான மூலையாறு, வடகரைப்பாறை, அடுக்கம், பாலமலை, வாழைகிரி உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக வாழைகிரி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் நூற்றாண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறையாக வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு 2006 வன உரிமை சட்டத்தின் கீழ் கடந்த 2018-ம் ஆண்டு வனத்துறை, வருவாய்த்துறை, சமூகநலத்துறை மூலம் நில அளவை செய்து பழங்குடியின மக்களுக்கு முறைப்படி தமிழக அரசு இடம் வழங்கியது. இந்த இடத்தில் பழங்குடியின மக்கள் விவசாயம் செய்வதுடன், அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பழங்குடியின மக்கள் வசிக்கும் இடத்துக்கு அருகே நிலம் வாங்கியுள்ள சிலர் இந்த இடம் முழுவதற்கும் தங்களிடம் பத்திரம் உள்ளது என்றும், பழங்குடியின மக்கள் வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்து மிரட்டி வருவதாக பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பழங்குடியின மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்தில் ஆதிவாசி மக்களின் கொடியை ஏற்றியும், கருப்பு கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தங்களுக்கு கொடுத்த இடத்தை ஆக்கிரமிக்க முயல்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x