Published : 05 Jan 2022 10:23 AM
Last Updated : 05 Jan 2022 10:23 AM

கரோனா ஒழிப்பில் தமிழகம் முன்னோடி மாநிலம்; ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்: விசிக, அதிமுக வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. வழக்கமாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தட்டு மூலம் இசைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை சென்னை இசைக்கல்லூரியின் இசைக் கலைஞர்கள் நேரடியாக பாட கூட்டத்தொடர் தொடங்கியது.

ஆளுநர் உரை: தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின் நடைபெறும் பேரவைக்கூட்டம் என்பதால், முதன் முதலாக அவர் உரையாற்றி வருகிறார். தனது உரையில் ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் கரோனா இரண்டாம் அலையின்போது சிறப்பாகச் செயல்பட்டு மாநிலத்தில் தொற்றின் வீரியத்தைக் கட்டுப்படுத்தியதாகப் பாராட்டினார். அரசு எடுத்த நடவடிக்கைகளால் கரோனா உயிரிழப்புகள் தமிழகத்தில் குறைந்துள்ளதாக ஆளுநர் ரவி தெரிவித்தார். அதேபோல் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் தொற்றைத் தடுக்கவும் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகப் பாராட்டினார். கரோனாவால் உயிரிழந்த 27,432 பேரின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரண நிதியை அரசு வழங்கியுள்ளதாக ஆளுநர் கூறினார். கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தினார். இலங்கை சிறைகளில் உள்ள 68 தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தினார். தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

விசிக வெளிநடப்பு: ஆளுநர் உரையைத் தொடங்கியவுடனேயே அவையில் ஒருபுறம் கூச்சலும், குழப்பமும் எழுந்தது. விடுதலை சிறுத்தைக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

விசிக ஆளும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. விசிக எம்.எல்.ஏ.க்கள் சிந்தனைச் செல்வன், ஆளூர் ஷானவாஸ், செய்யூர் பாபு, திருப்போரூர் பாலாஜி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

அதிமுகவினர் வெளிநடப்பு: அதேவேளையில், அதிமுகவின் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்: ஆளுநர் உரையைத் தொடர்ந்து அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசிப்பார். அத்துடன், பேரவையின் இன்றைய நிகழ்ச்சிகள் முடிவு பெறும்.

தொடர்ந்து, பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும். இந்தக் கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகள், குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது. அதேநேரம் நீட்தேர்வு ரத்து விவகாரம், மழை நிவாரணம், பயிர்பாதிப்பு நிவாரணம் வழங்கப்படாதது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து பேச எதிர்க்கட்சிகள் வாய்ப்பு கேட்கலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x