Published : 04 Jan 2022 09:51 AM
Last Updated : 04 Jan 2022 09:51 AM

சென்னை வெள்ள இடர் தணிப்பு, மேலாண்மை இடைக்கால அறிக்கை: முதல்வரிடம் சமர்ப்பித்தார் அறிவுரைக் குழுத் தலைவர்

சென்னை: சென்னை வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான இடைக்கால அறிக்கையை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், அறிவுரைக் குழுவின் தலைவர் வெ.திருப்புகழ் சமர்ப்பித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர்உரையாற்றும்போது, ‘‘சென்னையில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், வெள்ளக் கட்டுப்பாடு நடவடிக்கைகள், மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில், சுற்றுச்சூழல், நகர்ப்புறத் திட்டமிடல், பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்படும்" என்று அறிவித்தார்.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையரின் பரிந்துரை அடிப்படையில், சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையிலான அக்குழுவில், டெல்லி நகர் மற்றும்ஊரமைப்பு நிறுவன தலைமை திட்ட அலுவலர், காலநிலை பின்னடைவு பயிற்சி உலக வள நிறுவன இயக்குநர் நம்பி அப்பாதுரை, சென்னை வளர்ச்சி கல்வி நிறுவனப் பேராசிரியர் ஜானகிராமன், மும்பைஐஐடி கட்டுமானப் பொறியியல் துறை போராசிரியர் கபில் குப்தா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னையில் வடகிழக்குப் பருவமழை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தப் பாதிப்புகளையும், தண்ணீரை வெளியேற்றுவதற்கான வழிமுறைகளையும் இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, சென்னையில் வெள்ளப் பாதிப்பை தடுப்பது தொடர்பான இடைக்கால அறிக்கையை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், அறிவுரைக் குழுத் தலைவர் வெ.திருப்புகழ் நேற்று சமர்ப்பித்தார். 90 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், சென்னையில் மழைப் பாதிப்புகளை தடுப்பதற்கான சில ஆலோசனைகளை குழு வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, சென்னையில் மழையால் பாதிக்கப்படும் 561 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மழை பாதிப்புகளைத் தடுக்க, நீர்நிலைகள், நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் மற்றும் பல்வேறு வடிகால்களின் உண்மையான கொள்ளளவை மீட்க வேண்டும். சென்னையில் உள்ள மழைநீர்க் கால்வாய்களை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். கட்டுமானங்களை தரமானதாக மாற்றவேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x