Last Updated : 03 Jan, 2022 06:46 PM

 

Published : 03 Jan 2022 06:46 PM
Last Updated : 03 Jan 2022 06:46 PM

நளினி உள்பட ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அழுத்தம்: சட்டத்துறை அமைச்சர் பேட்டி

சேலம் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. உடன் எம்.பி. பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன், கோவை சரக சிறைத்துறை துணை தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர். | படம்: எஸ்.குரு பிரசாத்.

சேலம்: ‘நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை சம்பந்தமாக ஏற்கெனவே ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். தொடர்ந்து ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு அழுத்தம் தருவோம்,’ என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சேலம் மத்திய சிறையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (3-ம் தேதி) ஆய்வு மேற்கொண்டார். சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதா, கைதிகளுக்கு வழங்கும் உணவு தரமானாதாக உள்ளதா, அங்குள்ள மருத்துவமனைகள் மற்றும் சுயதொழில் உற்பத்திக் கூடங்கள் இயங்குவது குறித்து சிறைத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார்.

சிறையில் ஆய்வு முடித்துக்கொண்டு, அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"சேலம் மத்திய சிறையில் 1,351 சிறைக் கைதிகள் தடுப்புக் கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகளாக இருக்கின்றார்கள். மேலும், பெண்கள் சிறையில் 78 சிறைவாசிகள் உள்ளனர். சிறைக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சேலம் மத்திய சிறைக்கு வரக்கூடிய தடுப்புக் கைதிகள் அனைவருக்கும் மாவட்ட சிறையிலேயே கரோனா தொற்று பரிசோதனை செய்து, 10 நாட்களுக்கு ஒரு முறை கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சிறைக்கு வரும் கைதிகளின் பரிசோதனை முடிவில், தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகுதான் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

சேலம் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்குத் தேவையான தொழிற்பயிற்சிகளும், அடிப்படைக் கல்வி வகுப்புகளும் வழங்கப்படுகின்றன. மேலும், அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான கட்டில்கள், ரொட்டிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் இங்கு தயார் செய்து வழங்கப்படுகின்றன. குறிப்பாக, அரசு அலுவலகங்களுக்குத் தேவையான காகிதத்தால் தயார் செய்யப்பட்ட கோப்புகள் பல்வேறு சிறைச்சாலைகளில் தயாரிப்பது போல சேலம் மத்திய சிறைச்சாலையிலும் தயாரிக்கப்படுகின்றன.

சிறைகளில் சிறைவாசிகளுக்கு இதுபோன்ற ஆக்கபூர்வமான பணிகள் வழங்கப்படுவதால் ஒவ்வொருவரும் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.6,000 முதல் ரூ.15,000 வரை ஊதியமாகப் பெறுகின்றனர். இதன் மூலம் சிறைகளிலேயே அவர்களின் எதிர்காலத்திற்குத் தேவையான பயிற்சிகளையும் பெற்று, அதற்கான ஊதியத்தையும் பெறுகின்றனர்.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரே உத்தரவில் விடுதலை செய்யப்படுவது வழக்கம். தற்போது, ஒவ்வொரு கைதிக்கும் தனியாக அரசாணை வெளியிட்டு, விடுதலை செய்யப்படுவதால் தாமதம் ஏற்படுகிறது. தற்போது, வேலூர், கடலூரில் 70 கைதிகள் விடுதலைக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு, முதல்வர் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து ஆளுநர் மாளிக்கைக்கு அனுப்பி, அவரின் பரிந்துரைப்படி விடுதலை நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதான நளினி உள்பட ஏழு பேரின் விடுதலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பத் தேவையில்லை. ஆளுநரே முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அடுத்த வாய்தா வரும்போது, உச்ச நீதிமன்றம் நல்ல முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை சம்பந்தமாக ஏற்கெனவே ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். தொடர்ந்து ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு அழுத்தம் தருவோம்".

இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

சேலம் மத்திய சிறையில் நடந்த ஆய்வின்போது ஆட்சியர் கார்மேகம், எம்.பி. பார்த்திபன், வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் கோவை சரக டிஐஜி சண்முக சுந்தரம் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x