Published : 03 Jan 2022 03:45 PM
Last Updated : 03 Jan 2022 03:45 PM

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்குவதை அனுமதிக்கக் கூடாது: அன்புமணி 

அன்புமணி ராமதாஸ் | கோப்புப்படம்.

சென்னை: தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்குவதை அனுமதிக்கக் கூடாது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் சென்னையிலும், திண்டுக்கல்லிலும் நேற்றிரவு துப்பாக்கிகளைக் கொண்டு நடத்தப்பட்ட கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்குவது தமிழகத்தின் அமைதியையும் வளர்ச்சியையும் சீர்குலைத்து விடும்; அந்த முயற்சிகளை அரசு முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞர், அங்குள்ள செட்டிக்குளத்தின் கரையில் அமர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நேற்று நள்ளிரவில் அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், ராகேஷைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. செட்டிக்குளத்தின் மீன்பிடி உரிமையைக் குத்தகைக்கு எடுப்பதில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாகவே ராகேஷை அவரது எதிர்குழுவினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மற்றொரு புறம் சென்னை திருவான்மியூரில் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் நேற்றிரவு நுழைந்த கும்பல், அங்கிருந்த பயணச்சீட்டு வழங்கும் பணியாளரைத் துப்பாக்கி முனையில் மிரட்டிக் கட்டிப்போட்டுவிட்டு, ரூ.1.32 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. தலைநகர் சென்னையிலேயே இப்படி ஒரு நிகழ்வை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக கிடைக்கின்றன என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் குளங்களின் மீன்பிடி உரிமையை எடுப்பதில் குழு மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. அந்த மோதல்கள் இப்போது துப்பாக்கிச் சூடு நடத்தி எதிரிகளைக் கொல்லும் அளவுக்கு கொடூரமாகியிருப்பது மிகவும் ஆபத்தான போக்கு ஆகும். இது ஒடுக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது என்பதைக் காவல்துறையின் புள்ளி விவரங்களில் இருந்து அறியலாம். கடந்த 2015ஆம் ஆண்டில் மாமல்லபுரத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் காமேஷ் என்பவர் அவருடன் பயணம் செய்த ரவுடி ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்; கடந்த ஆண்டு பழனியில் நிலத்தகராறு தொடர்பாகத் திரையரங்க உரிமையாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்தனர்; அதற்கு ஒரு வாரம் முன்பு சென்னை சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இதேபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.

சென்னை கோயம்பேடு, கிழக்குக் கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் வட இந்திய மாணவர்கள் கள்ளத் துப்பாக்கிகளைக் கொண்டு வன்முறைகளில் ஈடுபட்ட நிகழ்வுகளும் காவல்துறை ஆவணங்களில் பதிவாகியுள்ளன. வட இந்தியாவில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படும் கள்ளத் துப்பாக்கிகள் தமிழகத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதே இதற்குக் காரணமாகும். ரூ.5 ஆயிரத்திற்குக் கூட கள்ளத் துப்பாக்கிகள் கிடைப்பதுதான் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்குவதற்குக் காரணம் ஆகும்.

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு உடனடியாக முடிவு கட்டாவிட்டால், சிறிய குற்றங்களுக்குக்கூட கள்ளத் துப்பாக்கியைப் பயன்படுத்தும் நிலை உருவாகிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மனித உயிர்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும். அது தமிழகத்தின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். கரோனா பரவல் காரணமாகப் பொருளாதாரத்திலும், பிற துறைகளிலும் தமிழகம் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

எனவே, தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான உறுதியான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கான தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்புத் தணிக்கைகளைக் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். துப்பாக்கி கலாச்சாரத்தையும், அதைக் கடைப்பிடிக்கும் சமூக விரோத சக்திகளையும் கட்டுப்படுத்தி, தமிழக மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ்வதை தமிழக அரசு உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறேன்'' என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x