Published : 03 Jan 2022 03:36 PM
Last Updated : 03 Jan 2022 03:36 PM

டாஸ்மாக் பார் டெண்டரில் வெளிப்படைத் தன்மை: ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை: டாஸ்மாக் பார் நடத்துவதற்கான டெண்டர் விடுவதில் விதிமீறல் இருப்பதாக புகார் சொல்லப்படும் நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "கரோனா வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் டாஸ்மாக் பாரை மிகத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற இரண்டு விதிமுறைகள் மட்டும் கூடுதலாகச் சேர்த்து 68 விதிமுறைகளுடன் இந்த டெண்டர் பின்பற்றப்படுகிறது. டெண்டர் விடுவதில் 2019-ல் 66 விதிமுறைகள் இருந்தன. தற்போது கரோனா காலம் என்பதால் அதனுடன் இரண்டு விதிமுறைகள் மட்டும் கூடுதலாகச் சேர்த்து விண்ணப்பம் வழங்கியுள்ளோம்.

டெண்டர் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் எந்தவிதமான ஒளிவு மறைவுக்கும் இடம் கிடையாது. குறிப்பாக என் வீட்டுக்கு முன்பு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் 5 பேர் என்னிடம் வந்து பேசினார்கள். அவர்களிடம் நான் ஒன்றுதான் கேட்டேன். உங்களுக்கு இந்த டெண்டர் சம்பந்தமாக ஏதேனும் ஐயப்பாடுகள் இருந்தால், என்னைச் சந்தித்து மனு எதுவும் அளித்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். கொடுக்கவில்லை என்றார்கள்.

இந்த 7 மாத காலத்தில் என்னைச் சந்தித்து இதுகுறித்துப் பேசியிருக்கிறீர்களா? என்றேன். இல்லை என்றார்கள். டாஸ்மாக் எம்.டி.யைச் சந்தித்து இது சம்பந்தமாக புகார், மனுக்கள் எதுவும் கொடுத்திருக்கிறீர்களா? என்றேன். இல்லை என்றார்கள். அப்போது எந்த அடிப்படையில் வந்து என் வீட்டிற்கு முன்பாக போராட்டம் நடத்துகிறீர்கள் என்று கேட்டேன். சில இடங்களில் இரண்டு பெட்டிகளை வைத்திருக்கிறார்கள் என்றார்கள்.

உங்கள் முன்புதான் டெண்டர் ஓப்பன் செய்தோம். வியாழன், வெள்ளிக்கிழமையில் டெண்டர் நடந்தது. 1, 2-ம் தேதி அரசு விடுமுறை. டெண்டர் புள்ளிகள் கோரப்பட்டு இன்றுதான் ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு நாட்களுக்குள் நீங்கள் என்ன முறைகேடுகளைக் கண்டுபிடித்தீர்கள் என்று அவர்களிடம் நான் கேட்டதற்கு, அவர்கள் ஊகத்தின் அடிப்படையில், மதுரையில் சொன்னார்கள், இன்னொரு ஊரில் சொன்னார்கள் என்று தெரிவித்தார்கள். ஊகத்தின் அடிப்படையில் கேட்பதற்கு நான் பதில் சொல்லக்கூடாது. உங்கள் கோரிக்கைகள் என்ன, என்னென்ன தவறுகள் நடந்துள்ளன என்று எழுதிக்கொடுங்கள் என்று கேட்டேன்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தயவு தாட்சண்யமின்றி தெளிவாகக் கடைப்பிடிக்கப்படும். எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல் டெண்டரில் அதிக விலை கோரியவர்களின் விண்ணப்பம் ஏற்கப்படும். கடந்த காலங்களில் டெண்டர் எடுத்தவர்கள் எந்தவிதமான நிலுவைத் தொகையும் வைத்திருக்கக் கூடாது. 68 விதிமுறைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யாதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இதில் எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லை. டெண்டர் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுகிறது. வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் எழுதிக் கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். எழுதித் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

எனது வீட்டிற்கு முன் வந்து, அரசியல் உள்நோக்கத்தோடு, எனக்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்று குறுகிய மனப்பான்மையோடு வந்தவர்களுக்கு நான் தெளிவாகப் புரியவைத்து அனுப்பியிருக்கிறேன்” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x