Published : 02 Jan 2022 05:55 AM
Last Updated : 02 Jan 2022 05:55 AM

விவசாயத் தொழிலாளர்கள் குறைவதால் வேளாண் பணிகள் பாதிப்பு: விவசாய பொறியியல் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க விவசாய பொறியியல் துறை சிறு, குறு விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில் சிறிய வகையிலான நவீன கருவிகளை வடிவமைத்து பரவலாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு 48,145.146 ஹெக்டரில் விவசாயம் நடைபெறுகிறது. இந்த மாவட்டத்தில் நெல் விவசாயம் பிரதானமானது. நெல் விவசாயத்தைப் பொறுத்தவரை சொர்ணவாரி பருவத்தில் 4,421 ஹெக்டரும், சம்பா பருவத்தில் 15,284 ஹெக்டரும், நவரை பருவத்தில் 18,786 ஹெக்டர் நெல் பயிரிடப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக வேர்க்கடலை 2,305 ஹெக்டரும், காய்கறிகள் மற்றும் பழங்கள் 1,480 ஹெக்டரிலும், கரும்பு 669 ஹெக்டரிலும் தற்போது பயிரிடப்படுகின்றன. மற்ற பயிர்கள் சிறு, சிறு அளவில் பயிரிடப்படுகின்றன.

இந்த மாவட்டத்தில் விவசாயத்தில் மொத்தம் 30,048 விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓர் ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம் செய்வதென்றால் உழவு, நடவு, களைபறிப்பு, அறுவடை என குறைந்தபட்சம் 40 பணியாளர்கள் தேவை. ஆனால் தற்போது விவசாயத்தில் ஈடுபடும் விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4,96,961 தொழிலாளர்களில் 66,066 தொழிலாளர்கள் மட்டுமே விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில்நிறுவனங்களில் வளர்ச்சி காரணமாக பெரும்பாலானோர் தொழில் நிறுவனங்களில் வேலைக்குச் சென்றுவிட்டனர். இருக்கும் விவசாயத் தொழிலாளர்களும் எளிமையாக இருப்பதால் அரசு செயல்படுத்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டம் போன்ற வேலைகளுக்குச் செல்வதற்கே ஆர்வம் காட்டுகின்றனர். அதைவிட கூடுதல் ஊதியம் கொடுத்தாலும் விவசாயப் பணிகளுக்கு வருவதில்லை. இதனால் சிறு விவசாயிகள் விவசாயம் செய்வது என்பது சவால் நிறைந்ததாக மாறிவிட்டது.

இதனால் விரக்தி அடையும் சிறு விவசாயிகள் ஒரு கட்டத்தில் தங்கள்நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்துவிட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். தனியார் நிறுவனங்களில் கூலித் தொழிலாளர்களாகவும் செல்கின்றனர். இதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளில் 25 ஆயிரம் ஹெக்டர் அளவுக்கு விவசாய உற்பத்தி சரிந்துள்ளது.

இதுகுறித்து விவசாயத் துறையைச் சேர்ந்த சில அலுவலர்கள் கூறும்போது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டம் சரியாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. இது தொடர்பாக பல முறை துறை தலைமைக்கு தெரிவித்துவிட்டோம். இந்த திட்டம் வாக்கு வங்கியுடன் இணைந்த திட்டமாக உள்ளது. இதனால் இதனை அரசியல் கட்சிகளும், அதனை சார்ந்து இயங்கும் விவசாய அமைப்புகளும் தொடர்ந்து ஆதரிக்கின்றன. உண்மையில் விவசாயிகளை கொண்டு இயங்கும் விவசாய அமைப்புகள் இந்தத் திட்டத்தை ஆதரிப்பது இல்லை. இந்த திட்டம் முறைப்படுத்தப்பட வேண்டும். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகுதான் விவசாய சாகுபடிபரப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

பெரு விவசாயிகள் ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க இயந்திரமயமாக்கலுக்கு மாறிவிட்டனர். ஆனால் சிறு விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்த திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களை சிறு விவசாயிகளின் விவசாய நிலங்களில் விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தலாம். சிறு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விவசாயத்துக்கு பயன்படும் இயந்திரங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து வேளாண்மை பொறியில் துறையின் செயற்பொறியாளர் பி.சந்திரனிடம் கேட்டபோது, “வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பதால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டியதில்லை. சிறு விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் களை பறிப்பது, நடவு செய்வது என பல்வேறு வகையான அறிவியல் கருவிகளை வடிவமைத்துள்ளோம். இந்த கருவிகளை சிறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கி வருகிறோம். பெரு விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்தில் வழங்குகிறோம். சூரிய ஒளி மின் உலர்த்தி கூட வந்துவிட்டது. இதன்மூலம் எளிதில் தாங்கள் பயிர் செய்யும் கடலை முதலிவற்றை உலர்த்திக் கொள்ளலாம். சிறு விவசாயிகளின் நலனை முன்னிறுத்தியே இதுபோன்ற கருவிகளை நாங்கள் வடிவமைத்து வருகிறோம். இவற்றை வாங்கி விவசாயிகள் பயன்படுத்தலாம். இது குறித்து தெரிந்து கொள்ள அருகாமையில் உள்ள வேளாண்மை பொறியில் துறை அலுவலகங்களை அணுகலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x