Last Updated : 01 Jan, 2022 02:05 PM

 

Published : 01 Jan 2022 02:05 PM
Last Updated : 01 Jan 2022 02:05 PM

முதல்வர் ரங்கசாமி ஏன்? பிரதமர், உள்துரை அமைச்சரை சந்தித்து மாநில அந்தஸ்து பெற அழுத்தம் கொடுக்கவில்லை: நாராயணசாமி கேள்வி

புதுச்சேரி

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி ஏன்? பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து மாநில அந்தஸ்து பெற அழுத்தம் கொடுக்கவில்லை என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று(ஜன. 1) தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘கரோனா தொற்றால் நாட்டின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது உருமாறிய புதிய வகை கரோனா தொற்றான ஒமைக்ரானால் இன்னும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாக்கியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கடுமையான கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், துரதிஷ்டவசமாக புதுச்சேரியில் கரோனா கட்டுப்பாட்டு விதிகள் காற்றில் பறக்கப்படவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கரோனா தொற்றின் முதல் இரண்டு அலையில் பெரிய அளவில் புதுச்சேரி மக்களை இழந்துள்ளோம்.

இந்த ஒமைக்ரான் தொற்றானது வேகமாக பரவக்கூடியது. தேவையில்லாமல் புத்தாண்டு கொண்டாட்டம் என்று சொல்லி புதுச்சேரிக்கு பல மாநிலங்களை சேர்ந்தவர்களை வரவழைத்து, கரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும். புதுச்சேரியில் கரோனா தொற்று இன்னும் அதிகமானால், அதற்கு முதல்வர் ரங்கசாமிதான் பொறப்பேற்க வேண்டும். புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் அது பரவ வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், சுகாதாரத்துறையோ, மாநில நிர்வாகமோ ஒமைக்ரான் வந்தால் மக்களை காப்பாற்றுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவில்லை. புதுச்சேரி அரசு மெத்தனமாக இருக்கிறது. மாநில அந்தஸ்து வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கேட்டுகிறார். இப்போது புதுச்சேரியில் இனக்கமான ஆட்சி இருக்கிறது. முதல்வர் ரங்கசாமி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாநில அந்தஸ்து பெற ஏன்? நடவடிக்கை எடுக்கவில்லை.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மாநில அந்தஸ்து இருந்தால்தான் எல்லா திட்டங்களையும் நிறைவேற்ற முடியும் என்று ரங்கசாமி கூறுகிறார். ஏன்? புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து மாநில அந்தஸ்து பெற அழுத்தம் கொடுக்கவில்லை

மத்திய பாஜக அரசு எல்லா வகையிலும் புதுச்சேரியை வஞ்சிக்கிறது. முதல்வரின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. கேட்கின்ற நிதியை கொடுக்கவில்லை. முதல்வர் நிறைய திட்டங்களை அறிவிக்கிறார். அதை நிறைவேற்ற வேண்டிய கடமை, பொறுப்பு என்.ஆர். காங்கிரஸ்-பாஜக ஆட்சிக்கு உண்டு. இவர்கள் கடந்த 6 மாத காலமாக அதிகார சண்டையில் போட்டி போட்டுக் கொண்டு எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரங்கசாமி தலைமையிலான அரசு ஒரு அலங்கோலமான அரசு என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த புத்தாண்டிலாவது அவர்கள் திருந்த வேண்டும். இனிமேலாவது கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சிறப்பு மாநில அந்தஸ்து பெறுவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் பாஜக குறிப்பிட்டிருந்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது என்று உள்துறை அமைச்சரே கூறியுள்ளார். இதிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

நாங்கள் போராடும்போது ரங்கசாமி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். இப்போது ரங்கசாமி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். புதுச்சேரியில் ஒவ்வொரு துறையிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது. எல்லா துறைகளிலும் பணமில்லாமல் வேலை நடக்கவில்லை. அரசு அதிகாரிகளிலிருந்து, அமைச்சர்கள் வரை எல்லோரும் ஊழலில் திளைத்திருக்கிறார்கள். ஒருநாள் இது பூகம்பமாக வெடிக்கும். இந்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும்.’’இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x