Published : 01 Jan 2022 10:57 AM
Last Updated : 01 Jan 2022 10:57 AM

டாப்சிலிப்பில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக யானை சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்பில் யானை சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த உலாந்தி வனச்சரகத்தில் உள்ள கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது இங்கு வனத்துறையால் 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நன்கு உடல்வாகு கொண்ட ஆண் யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கும்கியாகவும், சில ஆண் மற்றும் பெண் யானைகள் சுற்றுலா பயணிகள் சவாரிக்கும், வனப்பகுதி மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

யானை மீது அமர்ந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு சில நேரங்களில் வனப்பகுதியில் மேய்சலில் உள்ள மான்கள், காட்டு மாடுகள் ஆகியவற்றை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் பகல் நேரத்தில் யானை சவாரி செய்ய முடியும் என்பதால் டாப்சிலிப்புக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. யானை சவாரியில் வனப்பகுதிக்குள் சென்று திரும்ப அரை மணி நேரத்துக்கு நான்கு நபர்களுக்கு ரூ.800 வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் மூடப்பட்ட சுற்றுலா தலங்களுக்கு, நோய்பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியதும் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை அரசு வழங்கியது.

இதனால் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இங்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு நிறுத்தப்பட்ட யானை சவாரி, சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட பிறகும் இன்னும் தொடங்கப்படவில்லை.இதனால், சுற்றுலா பயணிகள் பலர் ஏமாற்றதுடன் திரும்பிச் செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x