Published : 31 Dec 2021 08:01 AM
Last Updated : 31 Dec 2021 08:01 AM

சென்னையில் இன்று நள்ளிரவு 12 முதல் காலை 5 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை

கரோனாவைத் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்துக்குச் செல்வோர், இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ்களைக் காண்பித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். படம்: ம.பிரபு

சென்னை

சென்னையில் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இன்று (டிசம்பர் 31) இரவு சென்னையில் வெளியிடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடக் கூடாது. ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் வர்த்தக ரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. ஹோட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் இரவு 11.00 மணி வரை செயல்படலாம். அதேசமயம், ஹோட்டல், கேளிக்கை விடுதி, பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் கேளிக்கை, நடனம், இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை.

கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றுகிறார்களா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கண்காணிக்க வேண்டும்.

புத்தாண்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் 10 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 12 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகனப் போக்குவரத்தை தவிர, மற்ற போக்குவரத்துக்கு நாளை (ஜன. 1) காலை 5 மணி வரை அனுமதி இல்லை. எனவே, பொதுமக்கள் இன்று இரவு 12 மணிக்கு முன்பு தங்கள் பயணங்களை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x