Published : 30 Dec 2021 06:06 AM
Last Updated : 30 Dec 2021 06:06 AM

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற விடாமல் தடுப்பது எது?- முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி

சென்னை

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரும் திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி திமுக ஆட்சியைப் பிடித்தது. மக்களுக்கு பயன் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளை இந்த அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அதிமுகசார்பில் பலமுறை அறிக்கைகள்வாயிலாகவும், சட்டப்பேரவையிலும், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டம் நடத்தியும் வலியுறுத்தினோம்.

ஆனால், தேர்தல் வாக்குறுதிகளில் மக்களுக்கு பொருளாதார ரீதியாக பயன் அளிக்கும் குறைந்தபட்ச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முதல் அடியைக்கூட அரசு இதுவரை எடுத்து வைக்கவில்லை. ஏற்கெனவே 2021-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு அதிமுக அரசு வழங்கிய ரூ.2,500 பொங்கல் பரிசைகூட வழங்காதது ஏழை மக்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் பேசிய மக்களவை திமுக குழுத்தலைவர், டி.ஆர்.பாலு, ‘பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் மத்திய அரசு கொண்டுவர வேண்டும். அதன்மூலம் பெட்ரோலிய பொருட்கள் விலை ரூ.40 முதல் ரூ.50 வரை குறையும். இதனால், தமிழகத்தில் சரக்கு போக்குவரத்து கட்டணம் குறைந்து, அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறையும்’ என்று தெரிவித் திருந்தார்.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே என கேட்டதற்கு, தனிமனிதன் கருத்தை எல்லாம் பொருட்படுத்தக்கூடாது என்று டி.ஆர். பாலு பதில் அளித்துள்ளார். தியாகராஜன் மாநில நிதியமைச்சராக உள்ளாரே என்று கேட்டதற்கு, ‘நான் திமுக பொருளாளர். திமுக தேர்தல் அறிக்கைதயாரிக்கும் குழுவின் தலைவராக இருந்தேன். அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தேர்தல் அறிக்கையில் பெட்ரோல்,டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதியை நான்தான் எழுதினேன்’ என தெளிவாக கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என பலமுறை பேசியுள்ளார்.

இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவர முடிவு செய்து, மாநில அரசுகளின் நிலைப்பாட்டை மத்திய அரசு கேட்டதாகவும், இதற்கு பெரும்பாலான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் மேற்கு வங்க அரசுகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்தி வந்துள்ளது.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவே, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவர வேண்டும் என பரிந்துரைத்த நிலையில், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற விடாமல் தடுப்பது எது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x