Published : 29 Dec 2021 06:51 AM
Last Updated : 29 Dec 2021 06:51 AM

திருவொற்றியூரில் வீடுகள் இடிந்த பகுதியில் அண்ணா பல்கலைகழக நிபுணர் குழு 2-வது நாளாக ஆய்வு: பாதுகாப்பு கருதி வெளியேறும் மக்கள்

சென்னை திருவொற்றியூர் அரவாகுளம் கிராமத் தெருவில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய வீடுகள் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தன. இதையடுத்து, பக்கத்து குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளை காலி செய்து, பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்களை தெருக்களில் வைத்துள்ளனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை

திருவொற்றியூர் கிராமத் தெருவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 300-க்கும்மேற்பட்ட வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இந்த வளாகத்தின் தெற்குப் பகுதியில் உள்ள 28 வீடுகள் கொண்ட குடியிருப்பு, நேற்று முன்தினம் இடிந்துதரைமட்டமானது. வீடுகள் இடிந்தகுடியிருப்பின் அருகில் வசிப்பவர்கள் அச்சம் காரணமாக வேறு இடங்களுக்கு வெளியேறினர். 72-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சேர்ந்தவர்கள் அரசு ஏற்பாடு செய்துள்ள திருமண மண்டபங்களுக்கும், தங்கள் உறவினர், நண்பர்களுடைய வீடுகளுக்கும் சென்றனர். அவர்களுக்குத் தேவையான அரிசி மற்றும் பொருட்கள், பணம் கொடுத்து திருவொற்றியூர் முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உதவினர்.

இதனிடையே, வீடுகள் இடிந்த இடத்தில் பொக்லைன் மூலம் மீட்புப்பணி நடைபெற்றது. தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளுக்குள் கிடந்த பீரோ, சமையல் எரிவாயுசிலிண்டர்கள், முக்கிய ஆவணங்கள், பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இடிபாடுகளை அகற்றும்போது அசம்பாவிதம் நடந்தால் அதை எதிர்கொள்ள மீட்புப் படையினருடன் காவல்துறையினர் தயாராக இருந்தனர்.

திருவொற்றியூர் கிராமத் தெருவில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வளாகத்தில் மீதமுள்ள 6 குடியிருப்புகளும் சிதிலமடைந்து இருப்பதால் அவற்றை இடித்துவிட்டு புதியகுடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என அங்கு வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், வீடு இடிந்த இடத்தின் அருகே உள்ள 24 வீடுகள் கொண்ட குடியிருப்பில் விரிசல் அதிகமாக இருப்பதால் அதை மட்டும் இடிக்க முடிவு செய்திருப்பதாகவும், மற்றகுடியிருப்புகள் குறித்து அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுஅறிக்கை கிடைத்ததும் அரசு முடிவெடுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடுகள் இடிந்த பகுதியையும், அருகில் உள்ள இதர குடியிருப்புகளையும் அண்ணா பல்கலைக்கழக சிவில் இன்ஜினீயரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயா தலைமையிலான நிபுணர் குழு நேற்று 2-வது நாளாக ஆய்வு நடத்தினர். அப்போது அங்குள்ள மக்களிடமும் கட்டிட நிலைப் பற்றி கேட்டறிந்தனர்.

சிதிலமடைந்த வீடுகளை காலி செய்யும்போது குடும்பத்துக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்பட்டது. தற்போது இத்தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதர குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்குள் செல்ல அச்சப்படும் மக்கள், தங்களுக்கு இதே பகுதியில் வீடு கட்டிக் கொடுத்து தங்களுக்கே அதை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் அதற்கான உத்தரவாதத்தை அரசு அளிக்கவேண்டும் என்றும் கோருகின்றனர். இதுகுறித்து திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

வீடுகள் இடிந்த இடத்தை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறும்போது, “மக்கள் தெருவில் இருக்க வேண்டிய சிரமத்தை சந்தித்து இருக்கின்றனர். குடிசை மாற்று வாரிய பழைய குடியிருப்புகள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்" என்று தெரிவித்தார்.

முன்னாள் கவுன்சிலருக்கு முதல்வர் பாராட்டு

திருவொற்றியூரில் வீடுகள் இடிந்த பகுதியில் உள்ள திருவள்ளுவர் குடியிருப்பில் வசிப்பவர் திமுக முன்னாள் கவுன்சிலர் தனியரசு. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்ததும் தனியரசு அங்கு சென்று பார்த்தார். அப்போது டி பிளாக்கில் அதிக விரிசல் இருப்பதைக் கண்டு பதறிப்போன அவர், அங்கிருந்தவர்களை துரிதமாக வெளியேற்றியுள்ளார். இதனால், வீடுகள் இடிந்தபோது உயிர் இழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தனியரசுவை பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தனியரசு கூறும்போது, ‘‘வீடுகளில் விரிசல் ஏற்படுவது குறித்து எனக்கு செல்போனில் காலை 8.30 மணிக்கு தகவல் வந்தது. உடனே அங்கு சென்று பார்த்தேன். விரிசல் ஏற்படுவதை நேரில் பார்த்ததும் குடிசை மாற்று வாரிய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தேன். அங்கிருப்பவர்களை உடனடியாக வெளியேற்றும்படி அவர் கேட்டுக் கொண்டார். மக்களிடம் பீதி ஏற்படுத்தாமல், நிலைமையை எடுத்துக்கூறி அவர்கள் அனைவரும் வெளியேற துரிதமாக செயல்பட்டேன். அங்கிருந்த 24 வீடுகளில் 3 வீடுகள் மட்டும் பூட்டப்பட்டிருந்தது. மற்ற வீடுகளில் இருப்பவர்கள் தங்களது உடைமைகளைப் பற்றி கவலைப்படாமல் வேகமாக வெளியேறியதால் உயிர் இழப்புகளை தடுக்க முடிந்தது. பொதுமக்கள் ஒத்துழைப்பால் இது சாத்தியமானது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x