Published : 29 Dec 2021 07:22 AM
Last Updated : 29 Dec 2021 07:22 AM

புதுச்சேரி கடல் பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய 2.5 டன் திமிங்கல சுறா

புதுச்சேரி தேங்காய்திட்டு மீனவர் வலையில் இறந்த நிலையில் சிக்கிய2.5 டன் எடை கொண்ட அரியவகை திமிங்கல சுறா. படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து வீராம்பட்டினத்தைச் சேர்ந்த சரவணன் தலைமையில் 4 மீனவர்கள் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். சுமார் 25 கி. மீட்டர் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, வலையில் பெரிய அளவிலான சுறா சிக்கிக்கொண்டது. அதனை அவர்கள் இழுக்க முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து மற்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சுமார் 50 மீனவர்கள் 2-க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் தேங்காய்திட்டு துறைமுகத்துக்கு இழுத்து வந்தனர். 15 அடி நீளமும் 2.5 டன் எடையுடனும் அந்த திமிங்கல சுறா இருந்தது.

மன்னார் வளைகுடா ஆழ்கடலில் இத்தகைய திமிங்கல சுறாக்கள் உள்ளன என்பதும், நீரோட்டத்தின் மாற்றத்தால் புதுச்சேரி கடற்பகுயில் இறந்த நிலையில் ஒதுங்கியபோது, மீனவர் வலையில் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மீன்வளம், வனத்துறை மற்றும் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தினர் நேரில் வந்து பார்வையிட்டனர்.

இதுதொடர்பாக மீனவர் தரப்பில் கூறும்போது, ‘‘இந்த அரியவகை திமிங்கில சுறா சிக்கியபோது படகும், ஆட்களும் தப்பித்தது பெரிய விஷயம். 25 கி.மீட்டர் தொலைவில் இருந்து துறை முகம் கொண்டு வந்தோம். இதனால்மீன்பிடி வலை சேதமடைந்துள்ளது. ஆட்கள் லேசானகாயம்அடைத்துள்ளனர்’’ என்றனர்.

வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘மீனவர் வலையில் சிக்கியது ‘வேல் ஷார்க்’ என்று அழைக்கப்படும் திமிங்கில சுறா. ஆண் சுறாவன இது இறந்த நிலையில் மீனவர் வலையில் சிக்கியுள்ளது’’ என்றனர்.

பின்னர் மாலையில் வனத்துறை துணை வனக்காப்பாளர் மஞ்சுன வள்ளி, வேளாண் அதிகாரி பிரபாகரன், வனக் காப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் ஊழியர்கள் இறந்த திமிங்கல சுறாவை ஜேசிபி இயந்திரம் மூலம் துறைமுக வளாகத்தின் வேறு பகுதிக்கு கொண்டு சென்று புதைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x