Published : 28 Dec 2021 08:43 AM
Last Updated : 28 Dec 2021 08:43 AM

ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவக் குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் டிச.31-ல் ஆலோசனை: சிறுவர் தடுப்பூசி பணியை ஜன.3-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து வரும் 31-ம் தேதிமருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தி முதல்வர் முடிவு அறிவிப்பார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்தா அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ‘டேட்டா செல்’ என்ற தரகு அலகு அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை இயக்குநர் கணேசன், இணை இயக்குநர் பார்த்திபன், மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலரான சித்த மருத்துவர் எம்.பிச்சையகுமார் உடன் இருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், கரோனா போல அதற்கும் சித்த மருத்துவத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரும் 31-ம் தேதி மருத்துவ வல்லுநர் குழுவினர் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார்.

தலா ரூ.50 ஆயிரம்

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் கருணைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த 8-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த26-ம் தேதி வரை 42,671 விண்ணப்பங்கள் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில் 20,934 பேருக்கு ரூ.50ஆயிரம் வீதம் ரூ.104.67 கோடிவழங்கப்பட்டுள்ளது. 18,863 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

சிறுவர்களுக்கு தடுப்பூசி

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, 15 முதல் 18 வயதுக்குஉட்பட்ட சிறுவர்களுக்கு கரோனாதடுப்பூசி போடும் பணி ஜன.3-ம் தேதியே தொடங்குகிறது. சென்னை போரூரில் உள்ள அரசினர் மகளிர்மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளனர். முதல்கட்டமாக அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்படும். முகாம்கள்மூலமாகவும் போடப்படும். சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x