Published : 27 Dec 2021 11:07 AM
Last Updated : 27 Dec 2021 11:07 AM

கொங்கு மண்டல பொறுப்பாளராக உதயநிதி ஸ்டாலின்?

கோவை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை கோவை கைவிட்டாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், அடுத்தடுத்து நடக்கவுள்ள தேர்தல்களில் வென்று, கோவையை திமுக கோட்டையாக மாற்றுவதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது. அதற்கேற்ப, முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், மு.க.ஸ்டாலின் கோவைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். கோவைக்கு 4 முறை வந்து திட்டப்பணிகளை ஆய்வு செய்துள்ளார்.

கோவையில் வளர்ச்சித் திட்டங்களை கண்காணிக்க அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்தார். பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரும், சென்னைக்கு அடுத்து கோவைக்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்றும் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் தெரிவித்து வருகிறார்.முதல்வர் ஸ்டாலினைப் போல், உதயநிதி ஸ்டாலினும் கோவைக்கு அடிக்கடி வந்து ஆய்வு செய்தும், கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோர் கோவையின் மீது காட்டும் கூடுதல் கவனம் திமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் திமுக மீண்டும் வெற்றித்தடத்தை தொடர்ந்து பதிவு செய்ய, உதயநிதி ஸ்டாலினை கொங்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.அதற்கேற்ப, கோவையில் நேற்று நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாம், பகுதி முகவர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், ‘‘ கோவையில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்தால், மாதத்துக்கு 10 நாட்கள் கோவையில் தங்கி பணியாற்றவும் தயாராக உள்ளேன்,’ என்று பேசியுள்ளார்.

துணை முதல்வர் பதவி மீது ஆசையா? - கோவையில் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

அமைச்சர், துணை முதல்வர் பதவிகளை நான் விரும்பவில்லை என கோவையில் நடந்த திமுக நிகழ்ச்சியில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேசினார்.

கோவை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில், திமுக உறுப்பினர் சேர்ப்பு முகாம், காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தார்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 2 நாட்கள் கோவையில் தங்கி பணிபுரிந்தேன். 10 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்று நினைத்தேன். ஆனால், கோவை மக்கள் ஏமாற்றிவிட்டீர்கள். தமிழக முதல்வர் பொறுப்பேற்றபோது, கரோனா தொற்று கோவையில் அதிகம் இருந்தது. ஆட்சிக்கு வந்த முதல் 2 மாதங்கள் கரோனாவை எதிர்த்து போராட வேண்டி இருந்தது. தற்போது ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. தமிழக மக்களை பாதுகாக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முதல்வர் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றவுடன், 24 லட்சம் புதிய உறுப்பினர்களை தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து சேர்த்தோம்.

திமுக தலைவர் இப்போது 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கூறிஉள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். அமைச்சர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி எனக்கு வழங்க வேண்டும் என இங்கு பேசியவர்கள் கூறினார்கள். நான் அதை விரும்பவில்லை. தலைவருக்கு துணையாக இருக்கவும், தலைவருக்கும் உங்களுக்கும் பாலமாக இருக்கவும் விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x