Published : 26 Dec 2021 06:40 AM
Last Updated : 26 Dec 2021 06:40 AM

பேரணாம்பட்டில் தொடரும் நில அதிர்வால் அச்சம்: விஐடி பல்கலைக்கழக பேராசிரியர் குழு ஆய்வு

பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியில் நில அதிர்வு குறித்து நேற்று ஆய்வு பணியில் ஈடுபட்ட மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் விஐடி பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மை துறை பேராசிரியர் கணபதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர்.

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு நகரில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வேலூர் விஐடி பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மை துறை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி அதிகாலை 4.17 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது என்றும் அது வேலூரில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் தெற்கு, தென் மேற்கு பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் அறிவித்தது. மேலும், இந்த நில அதிர்வு பூமிக்கு அடியில் 25 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

அதன்படி, ஆந்திர மாநில எல்லையை யொட்டி உள்ள மீனூர்மலை மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் வட்டத்துக்கு உட்பட்ட ஆந்திர எல்லையோர கிராமங்களில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பேரணாம்பட்டு நகரிலும், அருகில் உள்ள தரைக்காடு பகுதியிலும் நேற்று காலை 9.45 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இதை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். ஆனால், இந்த அதிர்வு குறித்த அறிவிப்பு எதுவும் தேசிய நிலஅதிர்வு மையத்தில் இருந்து வெளியாகவில்லை.

இதுகுறித்து, பேரணாம்பட்டு நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஹமீது, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘பேரணாம்பட்டு நகரில் குல்சார் வீதி, குட்டை மேடு, ஆமீனா வீதி, தரைக்காடு பகுதிகளில் நில அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர்’’ என்றார்.

வேலூர் ஆர்டிஓ ராமமூர்த்தி தலைமை யில் வேலூர் விஐடி பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மை துறை பேராசிரியர் ஜி.பி.கணபதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பேரணாம்பட்டு பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போதே பூமிக்கடியில் சத்தத்துடன் கூடிய அதிர்வு ஏற்பட்டது.

இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் ஜி.பி.கணபதி கூறும்போது, ‘‘எங்கள் ஆய்வின்போது 4, 5 வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதை பார்த்தோம். அருகில் உள்ள மலைகளின் நில அமைப்பில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்றும் பார்த்தோம். தொடர் மழையால் பூமிக்கடியில் உள்ள வெற்றிடங்களில் தண்ணீர் நிரம்பும்போது சில மாற்றங்கள் ஏற்படும். அந்த நேரத்தில் இதுபோன்ற சத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இருந்தாலும் புவியியல் வல்லுநர்களை வரவழைத்து ஆய்வு செய்யவுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x