Published : 25 Dec 2021 12:35 PM
Last Updated : 25 Dec 2021 12:35 PM

கொளத்தூர் அவ்வை நகரில் வீடுகள் இடிப்பால் பொதுமக்கள் பரிதவிப்பு:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 

சென்னை

சென்னை: கொளத்தூர் அவ்வை நகரில் வீடுகள் இடிப்பால் பொதுமக்கள் பரிதவித்துள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “ கடந்த அஇஅதிமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை பெறுவதற்கு ரூ. 1.5 லட்சம் முதல் 6.48 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருந்த உத்தரவை ரத்து செய்து, தற்போது தமிழ்நாடு அரசு எளிய முறையில் சுலப தவணை முறையில் மாற்றி உத்தரவிட்டது ஏழை, எளிய உழைப்பாளி மக்களுக்கு பெருமகிழ்ச்சியை தந்துள்ளது.

அதேநேரத்தில் கொளத்தூர், அவ்வை நகரில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக அப்பகுதி மக்கள் தலா 10 அடி வேண்டுமென மாநகராட்சி கோரிக்கையை ஏற்று நிலம் வழங்க முன்வந்த போதும், பாலம் கட்டும் இடம் போக அவ்வை நகர் பகுதி முழுவதையும் அப்புறப்படுத்தி பூங்கா கட்டப் போவதாக மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக அறிவித்து வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். கல்வியாண்டில் நிலம் கையகப்படுத்தக்கூடாது என்ற நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் மீறி இத்தகைய நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி உழைப்பாளி மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதுடன், தங்களின் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து கைக்குழந்தைகளுடன் குடியிருப்பதற்கு இடமில்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

எனவே, .தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, கொளத்தூர் அவ்வை நகரில் பாலம் கட்டுவதற்கான நிலம் போக பாக்கி நிலத்தில் உரியவர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டுமெனவும், பாலத்திற்காக முழுமையாக நிலத்தையும், வீட்டையும் இழந்த மக்களுக்கு மாற்று நிலம் வழங்கி வீடு கட்டித்தர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இத்தகைய அராஜகமான நடவடிக்கையில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகளை விசாரித்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x