Published : 25 Dec 2021 08:28 AM
Last Updated : 25 Dec 2021 08:28 AM

தாம்பரம் சானடோரியம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் நுரையீரல் மறுவாழ்வு சிகிச்சை மையம் திறப்பு: மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்

தாம்பரம் சானிடோரியத்தில் அமைந்துள்ள அரசு நெஞ்சக மருத்துவமனையில் நுரையீரல் மறுவாழ்வு சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர். படம்: எம்.முத்துகணேஷ்

தாம்பரம்: தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில், நுரையீரல் மறுவாழ்வு சிகிச்சை மையம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு, மறுவாழ்வு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தனர். அங்கிருந்த, உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா மையத்தை பார்வையிட்டனர். அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன் உடற்பயிற்சி இயந்திரத்தில் பயிற்சி செய்தார்.

தொடர்ந்து, உணவு பாதுகாப்பு மற்றும்மருந்து நிர்வாகத் துறை சார்பில், ‘சற்றே குறைப்போம், உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம்’ மற்றும் ‘உபயோகித்த எண்ணெய்யின் மறுபயன்பாட்டு திட்டம்’ ஆகியவற்றை தொடங்கி வைத்தனர். இதில், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் முனைவர் செந்தில்குமார், செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி, அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.தர், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அனுராதா, பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக ரூ.22.5 லட்சம் செலவில் பிராண வாயு வசதிகளுடன் கூடிய 225 கூடுதல் படுக்கைகள், ரூ 28.11 லட்சம் மதிப்பிலான 320 கேவி மின் திறன் கொண்ட ஜெனரேட்டர் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் அர்ப்பணித்தார்.

அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்காக, இம்மருத்துவமனையில் நுரையீரல் மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையம், வேறுஎங்கும் இல்லை. பொதுமக்கள், இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடைகளில் பயன்படுத்திய, 49,455 லிட்டர் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை சேகரித்து, ‘பயோ டீசலாக’ மாற்றியுள்ளனர். இந்தஅளவு எண்ணெயை சேகரித்த, இரண்டாவது மாவட்டமாக செங்கல்பட்டு திகழ்கிறது. அதேபோல் 2 லட்சம் கிலோ அளவு உபரி உணவை சேகரித்து மாதந்தோறும், 5 ஆயிரம் பேருக்கு வழங்கி வருகின்றனர். 255 ஓட்டல்களுக்கு ‘ரேட்டிங்’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பிரசாதம், அன்னதானம் வழங்குவதில், 26 கோயில்களுக்கு மதிப்பீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகள் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் தலைமையில் வல்லுநர் குழுவுடன் கலந்தாலோசித்து முடிவு அறிவிக்கப்படும். வல்லுநர்களின் கருத்து கேட்ட பின்னர் ஊரடங்கு உள்ளிட்ட முடிவுகள் குறித்து அறிவிக்கப்படும். தமிழகத்தில் 25 பேருக்கு டெல்டாவகை கரோனா பாதிப்பு உள்ளது. மொத்தம் 65 பேருக்கு சோதனை முடிவுகள் வந்த நிலையில் நேற்றுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்றுஉறுதி செய்யப்பட்டது. 3 பேர் குணமாகி வீடு திரும்பினர். இன்னும் 5 பேர் வீடு திரும்ப உள்ளனர் என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x