Published : 24 Dec 2021 12:26 PM
Last Updated : 24 Dec 2021 12:26 PM

அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட பயிற்சி மாணவர்களுக்கான ரூ.3,000 உதவித் தொகை திட்டம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை : இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர், வேதபாராயணர் உள்ளிட்ட பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.3,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (24.12.2021) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பில் அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் (தவில், நாதஸ்வரம்) ஆகிய பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000/- ஊக்கத் தொகையை ரூ.3,000/- ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை, 18 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி, தொடங்கி வைத்தார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் (தவில், நாதஸ்வரம்) ஆகியோருக்குப் பயிற்சிக் காலத்தில் ஏற்கெனவே ரூ.1,000/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, அந்த ஊக்கத்தொகை ரூ.3,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, பழனி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் மயிலாப்பூர், கபாலீசுவரர் திருக்கோயில் வேதபாராயணர் பள்ளிகளில் பயின்று வரும் 18 மாணவர்கள், மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை, அருணாச்சலேசுவரர் திருக்கோயில் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளில் பயின்று வரும் 24 மாணவர்கள் மற்றும் பழனி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தவில் / நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகளில் பயின்று வரும் 25 மாணவர்கள், என மொத்தம் 67 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ளனர்.

இந்த நிகழ்வின் போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்" என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x