Published : 23 Dec 2021 05:25 PM
Last Updated : 23 Dec 2021 05:25 PM

புதுக்கோட்டை வழியாக இயக்கப்பட்ட நாகூர்-கொல்லம் ரயில் மீண்டும் இயக்கப்படுமா?

புதுக்கோட்டை ரயில் நிலையம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வழியாக இயக்கப்பட்ட நாகூர்-கொல்லம் ரயில் மீண்டும் இயக்கப்படுமா? என மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதுக்கோட்டை ரயில் பாதை மீட்டர் கேஜாக இருந்தபோது பல ஆண்டுகளாக நாகூர்-கொல்லம் இடையே பயணிகள் ரயில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது. ராமேசுவரம் - சென்னை இடையே தற்போது இயங்கும் போட்மெயில் ரயிலைபோல புதுக்கோட்டை வழியாக இயங்கிய மிகவும் பழமையான ரயிலாக அது இருந்தது. நாகூர்-கொல்லம் ரயிலானது தினசரி நாகூரிலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு மாலை 5.12 மணிக்கு வந்து சேரும். பின்னர், 5.13 -க்கு புறப்பட்டு விருதுநகர், செங்கோட்டை, தென்மலை, கொட்டாரக்கரை வழியாக கொல்லத்துக்கு அதிகாலை 4.50-க்கு சென்றுகொண்டிருந்தது.

மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா

இதேபோன்று, மறுமார்கத்தில் கொல்லத்திலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, புதுக்கோட்டைக்கு காலை 9.51 மணிக்கு வந்து, 9.52-க்கு புறப்படும். இது, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை வழியாக நாகூருக்கு மாலை 4.10-க்கு சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் திருச்சி-புதுக்கோட்டை வழித்தடம் அகல பாதையாக மாற்றப்படுவதற்காக கடந்த 2004-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. மீண்டும் திருச்சி-புதுக்கோட்டை வழித்தடம் அகலப்பாதையாக கடந்த 2007-ல் மாற்றப்பட்டது. ஆனால், நாகூர்-கொல்லம் ரயில் மீண்டும் இயக்கப்படவில்லை.

புதுக்கோட்டையை கேரளா மாநிலத்துடனும் தமிழகத்தில் உள்ள நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளுடனும் இணைக்கும் ஒரே ரயிலாக ஏறக்குறைய அரை நூற்றாண்டுக் காலம் இயங்கியது. இதன் மூலம் சபரிமலை, வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட ஆன்மீக ஸ்தலங்களை இணைக்கும் சமூக நல்லிணக்கமாக திகழ்ந்த இந்த ரயிலை விரைவு ரயிலாக மாற்றி மீண்டும் புதுக்கோட்டை வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

அப்துல்லா எம்.பி.பதில்: இது குறித்து மாநிலங்களை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா கூறியபோது, ''மதுரையில் அண்மையில் நடைபெற்ற மண்டல அளவிலான ரயில்வே அலுவலர்களின் கூட்டத்தில் இது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேக் கோரிக்கையை கேரளா எம்.பி சுரேஷூம் வலியுறுத்தினார். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த ரயிலை இயக்குவதாக ரயில்வே அலுவலர்கள் உறுதி அளித்துள்ளனர். அவ்வாறு செய்யவில்லையெனில் மத்திய அமைச்சரிடம் இக்கோரிக்கை எடுத்துசெல்லப்படும். எப்படியும் அடுத்த ஆண்டு இந்த ரயிலை இயக்குவதற்கு அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x