

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஆதரவின்றி நின்றிருந்த 75 வயது மூதாட்டியை, சென்னை காவல் துறையின் ‘காவல் கரங்கள்’ உதவி மையத்தினர் மீட்டு, அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரைச் சேர்ந்த குப்பம்மாள் (75), கடந்த செப். 30-ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கடம்பத்தூர் போலீஸில் புகார் அளித்திருந்தனர்.
இதற்கிடையே, சென்ட்ரல் ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதரவின்றி நின்றிருந்த குப்பம்மாளை, ‘காவல் கரங்கள்’ குழுவினர் மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.
பின்னர் அவரது புகைப்படத்தை காவல் நிலையங்களுக்கு அனுப்பி விசாரித்ததில், அவர் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது மகள் ராஜேஸ்வரி மற்றும் உறவினர்களை வரவழைத்து, வடசென்னை காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் முன்னிலையில் நேற்று முன்தினம் குப்பம்மாள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். தாயை மீட்டுக் கொடுத்த போலீஸாருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
10,789 பேர் மீட்பு
சென்னை பெருநகர காவல்துறையின் ‘காவல் கரங்கள்’ திட்டம் தொடங்கிய 5 ஆண்டுகளில் இதுவரை 10,789 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4,350 பேர் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். ஆதரவற்றோர் குறித்து 24 மணி நேரமும் செயல்படும் 94447 17100 என்ற உதவி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.