

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2027 ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்பு நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2027-ன் படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவோ, திருத்தம், நீக்கம், இடமாற்றம் செய்யவோ விரும்பும் வாக்காளர்கள், தகுதியுள்ள குடிமக்களும் உரிய படிவங்களை நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர பதிவு அலுவலர் அலுவலகங்களில் அளிக்கலாம்.
மேலும் இணையதளம் (www.voterportal.eci.gov.in) மற்றும் கைப்பேசி செயலி (ECINET) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2027-ம் ஆண்டு ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தி அடைபவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் . தகுதியுள்ள குடிமக்கள் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் பங்கேற்க வேண்டும்.