

புது டெல்லி: காங்கிரஸ் கட்சி 2025-26 நிதியாண்டில் பெற்றுள்ள நன்கொடைகள் 75 சதவீதம் அளவுக்கு சரிந்து, ரூ.130.69 கோடியாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த நன்கொடைகளில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான சரிவு இதுவாகும்.
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.20,000-க்கு மேல் கிடைத்த நன்கொடைகள், 2024-25 நிதியாண்டில் ரூ.517.39 கோடியாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் ரூ.130.69 கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த 12 நிதியாண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இதற்கு முன்பு இத்தகைய பெரிய சரிவு 2015-16 நிதியாண்டில் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸின் நன்கொடைகள், அதற்கு முந்தைய ஆண்டிலிருந்த ரூ.141.46 கோடியிலிருந்து 86 சதவீதம் சரிந்தது.
கடந்த 2023-24 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சி ரூ.281.48 கோடி நன்கொடைகளைப் பெற்றிருந்தது. மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 2024-25 நிதியாண்டில் அது ரூ.517.39 கோடியாக உயர்ந்திருந்தது.
2024-25 நிதியாண்டில், பாஜக ரூ.6,074.02 கோடி நன்கொடைகளைப் பெற்றது. இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த நன்கொடையை விட சுமார் 12 மடங்கு அதிகம். 2025-26 நிதியாண்டுக்கான பாஜகவின் நன்கொடை அறிக்கை இன்னும் தேர்தல் ஆணையத்தால் பொதுவெளியில் வெளியிடப்படாததால், அது குறித்த புள்ளிவிவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.