Published : 23 Dec 2021 08:54 AM
Last Updated : 23 Dec 2021 08:54 AM

மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க முடியாததற்கு காரணம் என்ன?- அரசியல் அழுத்தம் கொடுக்க தென் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் முடிவு

மதுரை விமான நிலைய முகப்புத் தோற்றம்.

மதுரை

மதுரையை விட குறைவான பயணிகள் வந்து செல்லும் பிற மாநில விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையை மட்டும் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க முடியாது என மத்திய அரசு கூறுவதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கின்றனவா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய மூன்று சர்வதேச விமான நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் கோவை, திருச்சி விமான நிலையங்களுக்கு இணையாக மதுரை விமான நிலையத்துக்கு பயணிகள் அதிகளவு வருகிறார்கள். 2019-ம் ஆண்டில் மட்டும் 13 லட்சம் பயணிகள் மதுரைவிமான நிலையத்துக்கு வந்துள்ளனர். கரோனா நேரத்திலும் 2020-ம் ஆண்டு 9 லட்சம் பயணிகள் வந்துள்ளனர். கடைசி 4 ஆண்டுகளில் பயணிகள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு கரோனா ஊரடங்கு அமலில் இருந்த ஜூன் மாதத்தில் மட்டும் சர்வதேச நாடுகள், உள்நாட்டு நகரங்களில் இருந்து 104 விமானங்கள் மதுரையில் தரையிறங்கியுள்ளன. இதில் பெரிய ரக விமானங்களும் பாதுகாப்பாக வந்து சென்றுள்ளன. இதில் உலக நாடுகள் முழுவதும் இருந்து 9,419 பயணிகள் தென் மாவட்டங்களுக்கு வந்துள்ளனர்.

கரோனா உச்சத்தில் இருந்தபோது மட்டும் ஏன் வெளிநாட்டு விமானங்கள் மதுரைக்கு வருகின்றன என்ற கேள்வி அப்போது எழுந்தபோது, விமான நிலைய அதிகாரிகள், மதுரையைச் சுற்றியுள்ள மாவட்ட பயணிகள்தான் அதிகம் வருகின்றனர், அதனால்தான் வெளிநாட்டு விமானங்கள் மதுரையில் தரையிறக்கப்ப டுகின்றன என்றனர். ஆனால் மற்ற நேரங்களில் மதுரைக்கு நேரடி சர்வதேச விமான சேவை இல்லாததால் இப்பயணிகள் திருச்சி, திருவனந்தபுரம் விமான நிலையங்கள் வழியாகச் செல்கின்றனர்.

தற்போது கொழும்பு, துபாய் ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கு மட்டுமே மதுரையிலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. முன்பு சிங்கப்பூருக்கு இயக்கப்பட்ட விமான சேவை கரோனா ஊரடங் கால் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது வரை மீண்டும் தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறுகையில், ‘‘மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்காமல் இருப்பதன் பின்னணியில் அரசியல் காரணம் இருப்பதாக சந்தேகிக்கிறோம். ஏனெனில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோ, குஷிநகர், வாரணாசி ஆகிய மூன்று இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் செயல்படுகின்றன. தற்போது நான்காவதாக அயோத்தியில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அப்படியென்றால் அங்கு மட்டும் எப்படி பிஏஎஸ்ஏ ஒப்பந்தத்தில் சேர்க்க முடிகிறது. அருகில் உள்ள கேரளாவில் கூட 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் செலுத்திய ஜிஎஸ்டி வரி, நாட்டில் உள்ள மற்ற 21 மாநிலங்கள் செலுத்திய மொத்த வரியைவிட அதிகம். இந்த அடிப்படையில் தமிழகத்தில் 14 சர்வதேச விமான நிலையங்களை அமைக்கலாம். அதனால் மதுரை விமான நிலையம் புறக்கணிக்கப்படுவது ஏன் என்ற அரசியல் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்,’’ என்றார்.

இதுகுறித்து தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: மத்திய அரசு எந்த அடிப்படையில் சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்குகிறது எனத் தெரியவில்லை. உள்நாட்டு பயணிகள் வருகை திருச்சியைவிட மதுரையில் அதிகம். கோவையைவிட வெளிநாட்டுப் பயணிகள் அதிகம். மதுரை யைவிட மிக மிகக் குறைவாக வெளிநாட்டு பயணிகள் வந்து செல்லும் திருப்பதி, மங்களூர், வாரணாசி, ஷீரடி விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை மதுரை விமான நிலைய பயணிகள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் 10 சதவீதம் கூட இல்லை. ஆன்மிக நகரங்கள் என்ற அடிப்படையில் திருப்பதி, ஷீரடி, வாரணாசிக்கு சர்வதேச விமான நிலையம் அந்தஸ்து வழங்கியிருந்தால், உலகப் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயில் உள்ள மதுரைக்கும் சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கலாமே.

இவ்வாறு அவர் கூறினார்.

‘கஸ்டம்ஸ்’ ஏர்போர்ட் என்றால் என்ன?

மதுரை திருநகரைச் சேர்ந்த விமான சேவை ஆர்வலர் சங்கர் கூறுகையில், ‘‘மதுரை ‘கஸ்டம்ஸ்’ விமான நிலையமாக மட்டுமே தற்போது செயல்படுகிறது. இந்த தரத்திலான விமான நிலையங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட இந்திய விமானங்களை மட்டுமே இயக்கலாம். வெளிநாடுகளில் இருந்து அந்த நாட்டு விமான நிறுவனங்கள் நேரடியாக இயக்க ஆர்வமாக இருந்தாலும் விமானங்களை இயக்க முடியாது. அதற்காகத்தான் பிஏஎஸ்ஏ என்ற இரு நாட்டு விமான சேவை ஒப்பந்தத்தை மேற்கொள்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தில் இதுவரை மதுரை விமானநிலையம், இலங்கையுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையமாக மதுரை அறிவிக்கப்பட்டால் இந்திய விமானங்கள் மட்டுமல்லாது எந்த வெளிநாட்டு விமானங்களும் அந்த நாடுகளுக்கு நேரடியாக விமானங்களை இயக்கலாம். ​மதுரை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் தவிர வேறு எந்த காரணமும் இருக்க முடியாது’’ என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x