Published : 22 Dec 2021 05:09 PM
Last Updated : 22 Dec 2021 05:09 PM

தமிழகத்தில் முதல் முறை: உதகையில் மண் உறுதிப்படுத்தும் திட்டம் தொடக்கம்

உதகை மலைப்பாதை நெடுஞ்சாலையில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவைத் தடுக்க பசுமை தொழில்நுட்ப முறையான மண் உறுதிப்படுத்தும் திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

உதகை: தமிழகத்தில் முதல் முறையாக, உதகை மலைப்பாதை நெடுஞ்சாலையில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவைத் தடுக்க பசுமை தொழில்நுட்ப முறையான 'மண் உறுதிப்படுத்தும் திட்டத்தை' பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்துகள் அதிகம். இமயமலைக்கு அடுத்தபடியாக நீலகிரி மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு காரணமாக நிலச்சரிவு ஏற்படுகிறது. மாநில பேரிடர் துறையினரால் தமிழ்நாட்டில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என 4,170 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் இயற்கை பேரிடரால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 284 ஆகும். இவற்றில் மிக அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகள் 68, அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 89, மிதமான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 79 மற்றும் குறைந்த பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 48 ஆகும். இவற்றில் நெடுஞ்சாலைத் துறையில் பாதிப்புக்குள்ளான பகுதிகள் 49 ஆகும்.

இப்பகுதிகளில் புதிய தொழில்நுட்பத்துடன் நிலச்சரிவைத் தடுக்க பசுமை தொழில்நுட்ப முறைகளான சணல் வலை அமைத்தல் மற்றும் ஹைட்ரோ சீட்டிங் எனப்படும் நீர் விதைப்பு முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மலையில் செங்குத்தான சரிவில் மண் அரிப்பைத் தடுத்து புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி மண் ஆணி (Soil Nailing) அமைத்து ஜியோகிரிட் மூலம் மண் உறுதித்தன்மையை அதிகரித்து ஹைட்ரோசீடிங் முறையில் புற்கள் வளர்க்கும் முறையை உதகை-கோத்தகிரி சாலையில் உள்ள கோடப்புமந்து பகுதியில் தமிழகத்தில் முதன்முறையாக சோதனை முறையில் பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''செங்குந்தான மலைச்சரிவுகள் மற்றும் அதிக மழைப்பொழிவு உள்ள பகுதிகளைப் பசுமையாக்குதல் முறையில் நிலச்சரிவைக் கட்டுப்படுத்துதல். சரிவுகளைக் கட்டுப்படுத்த மேற்கண்ட முறைகளை சோதனை முறையில், உதகை கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து மற்றும் கட்டபெட்டு அருகில் பாக்கியநகர் ஆகிய இரு இடங்களில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

நிலச்சரிவு மற்றும் மண்சரிவைத் தடுக்க தடுப்புச் சுவர் அமைக்கப்படுகிறது. இருப்பினும் அதிக மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பர்லியாறு முதல் நடுவட்டம் வரை ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகளுக்குத் தீர்வு காண இந்திய தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் அயோத்திராமன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வடிவமைப்புடன் கூடிய மண் உறுதிப்படுத்தும் திட்டம் மரப்பாலம் அருகில் 30 மீட்டர் அகலம் 26 மீட்டர் உயரம் முதல் முறையாகக் கட்டப்பட உள்ளது.

இந்த இடங்களில் மண் மாதிரிகள் சேகரித்து அவற்றின் தன்மை குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் புவியீர்ப்பு கேபியன் தடுப்புச் சுவர் கட்டப்படுகிறது. மண் சரிவைத் தடுக்கும் வகையில், நங்கூர ஆணியுடன் மெல்லிய கம்பிவலை கொண்ட தடுப்புச் சுவர் அமைத்து, தண்ணீர் உட்புகாத வகையில் நவீன தொழில்நுட்ப முறையில் தாவரங்களை வளர்க்கும் பணி முதல் முறையாகத் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நீலகிரி மாவட்டத்தில் 284 இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் வெற்றியடைந்தால் தமிழகம் முழுவதும் உள்ள 4101 நிலச்சரிவு அபாய இடங்களில் செயல்படுத்தப்படும்''.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x