Published : 01 Mar 2016 07:21 PM
Last Updated : 01 Mar 2016 07:21 PM

சூரிய ஒளி மின்சார உற்பத்தி ஒப்பந்தத்தில் விதி மீறல்கள்: விசாரணை நடத்த கருணாநிதி வலியுறுத்தல்

சூரிய ஒளி மின்சாரம் உற்பத்திக்காக அதானி குழுமத்துடன் தமிழக அரசு விதிகளை மீறி ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ரூ.1400 கோடி மதிப்பீட்டில் 200 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கடந்தாண்டு செய்திகள் வெளியாகின. ‘சூரிய ஒளி மின்சாரத்தின் கொள்முதல் விலை யூனிட் ஒன்று ரூ. 5.86 ஆக குறைந்து விட்டது. அடுத்த ஆண்டில் இது யூனிட் ரூ.5 அளவுக்குக் குறைய வாய்ப்புள்ளது. இந்நிலையில், அதானி நிறுவனத்துடன் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 கூடுதலாக ரூ.7.01 என்ற விலைக்கு மின்சாரம் வாங்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் பல முறைகேடுகள் உள்ளது’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

உடன்குடி அனல் மின் நிலையம் திட்டப்பணிகளுக்காக குறைந்த தொகையைக் குறிப்பிட்டு ஒப்பந்தப் புள்ளியைத் தாக்கல் செய்த போதிலும், தங்களுக்கு அனுமதியளவிக்கவில்லை. எனவே, டெண்டருக்கு தடை விதிக்க வேண்டுமென சதர்ன் சென்ட்ரல் சீனா பவர் எனர்ஜி டிசைனிங் இன்ஸ்ட்யூட் திரேசே கன்சார்டியம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்யநாராயணா, புதிய டெண்டர் விட இடைக்காலத் தடை விதித்தார்.

உடன்குடி அனல் மின் நிலையம் அமைக்க இரண்டாவது முறையாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ள சூழலில், அதானி குழுமத்துக்காக ஆஜரான வழக்கறிஞர் கபிலன் மனோகரன் என்பவர், ‘தமிழகத்திலே அதானி குழுமம் சோலார் மின் உற்பத்தி திட்டங்களை அமைக்க நிலங்களை வாங்குவதில் குறைந்த பட்சம் ஒரு டஜன் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை வெளிப்படுத்துவேன் என்றார். இதையடுத்து, வழக்கறிஞர் கபிலன் மனோகரன் எதையும் வெளிப்படுத்தக் கூடாது என்று அதானி குழுமம் சென்னை உயர் நீதி மன்றத்தில் தடையாணை பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கமுதியில் அதானி குழுமத்தினர் நிறுவவிருக்கும் 648 மெகா வாட் சூரிய ஒளி மின் திட்டப் பணிகளுக்காக வாங்குவதாக உள்ள 1,800 ஏக்கர் நிலங்களின் பத்திரங்களைச் சரி பார்ப்பதற்காக ரூ.70 லட்சம் வழக்கறிஞர் கட்டணத்துடன் வழக்கறிஞர் கபிலன் மனோகரன் பணியமர்த்தப்பட்டார். வழக்கறிஞர் கபிலனிடம் அதானி குழுமம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்தை 3 கட்டமாகத் தர வேண்டும்.

வழக்கறிஞர் கட்டணத்தை கபிலன் தன்னிச்சையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் என்று உயர்த்திக் கொண்டு, மேலும் ரூ.1 கோடியே 43 இலட்சம் ரூபாய் தர வேண்டும் என 4-1-2016 அன்று கடிதம் மூலம் கேட்டுள்ளார். ‘அதானி குழுமத்துக்காக நிலம் வாங்கியதில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இப்போதுள்ள சட்ட விதிமுறைகள்படி முறையாக எதுவுமே நடைபெறவில்லை. மின்வாரியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமே பல்வேறு மோசடி ஆவணங்களின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் பல்வேறு வங்கிகளிடம் அதானி குழுமத்துக்காக சுமார் ரூ.4 ஆயிரத்து 300 கோடி கடன் பெறப்பட்டுள்ளது” என்று இ-மெயில் மூலம் தெரிவித்துள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும் போது, அதானி குழுமத்தோடு அவசர அவசரமாக அரசு செய்து கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் சட்ட விதிகளுக்குப் புறம்பாக ஒப்பந்தப் புள்ளிகள் கோராமல் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. எனவே, இந்தத் திட்டத்தை அதானி குழுமத்துக்கு அதிமுக அரசு அளித்தது பற்றி சட்டப்படியான குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாகவுள்ளது'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x