Published : 21 Dec 2021 07:59 AM
Last Updated : 21 Dec 2021 07:59 AM

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட சிவாலயங்களில் ஆருத்ரா சிறப்பு வழிபாடுகள்

காஞ்சி, திருவள்ளூர், திருக்கழுக்குன்றம்: காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடுகள், அபிஷேகங்கள் நடைபெற்றன.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில், திருவாதிரை நட்சத்திர தினமான நேற்று முன்தினம் இரவு முதல்,நேற்று அதிகாலை வரை நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் உள்ள பழைய ஆருத்ரா மண்டபத்தில் விடிய விடிய அபிஷேகம் நடைபெற்றது.

இதில் விபூதி, சந்தனம், கதம்பத்தூள், நெல்லிப்பொடி, வில்வப்பொடி, சாத்துக்குடி, வாழை மற்றும் திராட்சை பழங்கள், பஞ்சாமிர்தம், பால், தேன் உள்ளிட்ட 33 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆருத்ரா அபிஷேகம் முடியும் வரை பக்தர்கள் அமர்ந்து, தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. மாறாக பக்தர்கள் வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஆருத்ரா அபிஷேகத்தை தொடர்ந்து, நேற்று காலை 6 மணியளவில் கோயில் வளாகத்தின் உள்ளேயே கோபுர தரிசனமும், மதியம் 1 மணிக்கு அனுக்கிரக தரிசனமும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில், மாமல்லபுரம், திருப்போரூர், செங்கல்பட்டு, மாடம்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள சிவாலயங்கள் மற்றும் காஞ்சிபுரம் நகரில் உள்ள ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், மணிகண்டீஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர், முத்தீஸ்வரர் என ஏராளமான சிவாலயங்களில் மார்கழி மாத ஆருத்ராவை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

மேலும், ஆருத்ரா தினத்தில் கோயில்களில் சுவாமி வீதியுலா நடைபெறும் என்பதால், சாலைகள் விழாக்கோலத்துடன் காணப்படும். தற்போது கரோனா தடுப்புநடவடிக்கையால் இந்தாண்டும் சுவாமி வீதியுலா ரத்து செய்யப்பட்டது. ஒரு சில கோயில்களில் மட்டும் உட்பிரகாரத்தில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x