Published : 20 Dec 2021 12:02 PM
Last Updated : 20 Dec 2021 12:02 PM

படிக்கட்டுப் பயணம்; ஓட்டுநர்களை பொறுப்பேற்கச் சொல்வதா?- காந்திய மக்கள் இயக்கம் கேள்வி 

தமிழருவி மணியன் | கோப்புப் படம்.

சென்னை: மாணவர்கள் படிக்கட்டுப் பயணம் மேற்கொள்வதற்கு யார் காரணம் என்பதை ஆராயாமல் தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்களையும் நடத்துநர்களையும் பொறுப்பேற்கச் சொல்வதா என்று காந்திய மக்கள் இயக்கம் கேள்வி எழுப்பியுளளது.

தமிழருவிமணியன் தலைமையில் இயங்கிவரும் காந்திய மக்கள் இயக்கம் சார்பாக அதன் மாநிலப் பொதுச் செயலாளர் பா.குமரய்யா வெளியட்டுள்ள அறிக்கை:

சென்னையில் கடந்த சனிக்கிழமை (18ஆம் தேதி) அன்று மாநகரப் போக்குவரத்துக் கழக நடத்துநர்களும், ஓட்டுநர்களும் திடீர் போராட்டத்தில் இறங்கும் அளவிற்குப் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களின் அத்துமீறல்கள் நடந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்டத்தில், 13ஆம் தேதியன்று படிக்கட்டில் பயணம் செய்த மாணவர் தவறி விழுந்து மரணம் அடைந்துள்ளார். அடுத்து 14ஆம் தேதியன்று, அதே காஞ்சியில் போக்குவரத்து நடத்துநர் மற்றும் ஓட்டுநருடன் படிக்கட்டுகளில் பயணம் செய்த மாணவர்கள் வாக்குவாதம் செய்து, அவர்களைத் தகாத வார்த்தைகளினால் திட்டி உள்ளனர். மதுரை, கோவை, திருச்சி எனத் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் படிக்கட்டு பயண சாகசங்கள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன.

மாணவர்களின் படிக்கட்டுப் பயணங்களுக்குப் பேருந்து நடத்துநர்களும், ஓட்டுநர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு பொறுப்பற்ற அறிக்கையைக் கடந்த 8ஆம் தேதியன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை வழக்கம் போல் சிகரெட், மது உற்பத்திக்கு அனுமதித்துவிட்டு சிகரெட் பெட்டியில், மதுப் புட்டியில் 'உடல் நலத்திற்குத் தீங்கானது' என்ற அறிவுரையை அச்சிடுவதற்கு இணையாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. முதலாவதாக, எந்த ஓட்டுநரும், நடத்துநரும் மாணவர்களைப் படிக்கட்டுகளில் பயணிக்கப் பரிந்துரைப்பதில்லை.

படிக்கட்டு பயணத்திற்குப் பேருந்து உள்ளே இடமில்லை என்ற ஒரு காரணத்தைக் கணக்கில் கொண்டாலும், பெரும்பாலும் சாகசம் செய்வதாக நினைத்துக் கொண்டும், எதிர் பாலினத்தைக் கவர வேண்டும் என்ற நினைப்பிலும் இவை செய்யப்படுபவை என்பதை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மாணவர்களின் கூட்ட நெரிசலுக்குக் காரணம், அருகாமை பள்ளிகள் இல்லை அல்லது அந்தப் பள்ளிகளில் கல்வித் தரம் இல்லை, அனைத்துப் பள்ளிகளும் ஒரே நேரத்தில் காலையில் துவங்குகின்றன, அந்தக் கூட்ட நெரிசலைச் சமாளிக்கப் பேருந்துகள் இல்லை போன்றவையே காரணிகளாக உள்ளன. இவற்றையெல்லாம் தீர்ப்பதற்கு வழிவகைகளை ஆராயாமல் குறுக்கு வழித் தீர்வுகளையே முன் வைக்கிறது அரசு.

போக்குவரத்துத் துறை அமைச்சரை விட, போக்குவரத்துத் துறை செயலாளரை விட, போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர்களை விட, ஓட்டுநர்களும் நடத்துநர்களும் தான் பொறுப்பானவர்கள் என்று அரசு கருதும் விந்தையை என்னவென்று சொல்வது?

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற அழகேசன், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, மத்திய ரயில்வே இணை அமைச்சராக பணியாற்றினார்; அவர் இணையமைச்சராக இருந்த போது லால்பகதூர் சாஸ்திரி, ரயில்வே கேபினட் அமைச்சராக இருந்தார். அப்போது அரியலூர் பகுதியில் மிகப் பெரிய ரயில் விபத்து ஏற்பட்டது. விபத்துக்குத் தார்மீக பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர்கள் லால்பகதூர் சாஸ்திரியும், அழகேசனும் தங்களது ராஜினாமாக் கடிதத்தை, பிரதமர் நேருவிடம் வழங்கினர்; நேரு அதை ஏற்க மறுத்துவிட்டார் என்பது வேறு விஷயம். இதனை இன்றைக்கு உத்தரவிடும் மாண்புமிகுக்கள் கருத்தில் கொள்ளுதல் அவசியம்.

இந்தக் கூட்ட நெரிசலைத் தவிர்த்திட, முதலில் பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் மாணவர்களை நெறிப்படுத்த வேண்டும். அருகமைப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டும். ஒரு நகரை அல்லது பள்ளிகள் அதிகம் இருக்கும் பகுதிகளை மண்டல வாரியாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் பள்ளி, கல்லூரிகள் தொடங்கும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். இதனால், மாணவர்களும், ஆசிரியர்களும் பயன் பெறுவார்கள்.

மேலும், இந்தப் படிக்கட்டு பயணம், கூட்ட நெரிசல் போன்றவற்றின் காரணமாகப் பெண் குழந்தைகள் (மாணவியர்) தங்கள் கல்வியைத் தொடர்வதில் இடையூறு ஏற்படுமோ என்ற கவலையும் ஏற்படுகிறது. மாணவர்களுக்கு இலவச பேருந்து பாஸ் என்பதால் பேருந்துகளின் எண்ணிக்கையைப் போக்குவரத்துக் கழகம் குறைத்து விட்டதோ என்ற ஐயமும் எழுகிறது. அரசு இந்த விஷயத்தை தெளிவுபடுத்துவதுடன், மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும், தானியங்கிக் கதவுகள் கொண்ட பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் எனக் காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு பா.குமரய்யா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x