Published : 20 Dec 2021 06:56 AM
Last Updated : 20 Dec 2021 06:56 AM

சென்னை மாநகராட்சி சார்பில் கோவளம் வடிநிலப் பகுதியில்: ரூ.150 கோடியில் 40 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் கோவளம் வடிநிலப் பகுதியில் ரூ.150 கோடியில் சுமார் 40 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பருவமழை காலங்களில் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் தென் சென்னையின் விரிவாக்கப்பட்ட ராம்நகர், மடிப்பாக்கம், குபேர நகர், ராஜேஷ் நகர், காரப்பாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில், கோவளம் வடிநிலப் பகுதியில் ரூ.1,714 கோடி மதிப்பில் ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கஅரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

கோவளம் வடிநிலப் பகுதி 2 திட்டக் கூறுகளாகப் பிரிக்கப்பட்டு, அப்பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி தொழில்நுட்ப வல்லுநர் குழு மூலமாக வடிவமைக்கப்பட்டு, மழைநீர் கடத்தும் திறனை கணினி மென்பொருள் மூலமாக ஆய்வுசெய்து, இறுதி வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கோவளம் வடிநிலப் பகுதியில் மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் முதல்கட்டமாக மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணியை மேற்கொள்ள அமைச்சர் உத்தரவிட்டார்.

இதன்படி, கோவளம் வடிநிலப் பகுதியில் உள்ள ஆலந்தூர் மற்றும் பெருங்குடி மண்டலத்தில் வெள்ளத்தால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படும் கண்ணன் காலனி, நேரு காலனி, நங்கநல்லூர், பி.வி.நகர், இந்து காலனி, நிவாசா நகர், சதாசிவம் நகர், ராம் நகர், குபேந்திரன் நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் உள்ள 139 தெருக்களில் 27.20 கி.மீ. நீளத்துக்கு புதிய மழைநீர் வடிகால்கள், 95 தெருக்களில் 12.60 கி.மீ. நீளத்துக்கு பழுதடைந்த மழைநீர் வடிகால்களை மறுசீரமைக்கும் பணிகள் என மொத்தம் 234 தெருக்களில் 39.80 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு ஜெர்மன் நாட்டு வங்கியின் ஒப்புதல் பெறப்பட்டு, 3 சிப்பங்களாகப் பிரிக்கப்பட்டு, ரூ.150.45 கோடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கும். இதன் மூலம் இப்பகுதிகளில் வரும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவது முற்றிலும் தவிர்க்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x