Published : 18 Dec 2021 08:15 AM
Last Updated : 18 Dec 2021 08:15 AM

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் ; தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் மாநிலம் முழுவதும் எதிர்ப்பு: தேனி, சேலத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி பங்கேற்பு

சென்னை/ தேனி/ சேலம்: மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தாத விடியாத அரசாகவே திமுக இருந்து வருவதால் தமிழகம் முழுவதும் அரசுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது என்று அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு நிவாரணஉதவி வழங்க வேண்டும், பொங்கல்பரிசுத் தொகை அறிவிக்க வேண்டும், விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும். கல்விக்கடன், விவசாயகடன், நகைக்கடன் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தேனி பங்களாமேட்டில் நடந்தஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் நீர் திறப்பு உரிமையை திமுக விட்டுக்கொடுத்துவிட்டது. ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையில் ரூ.5, டீசல் விலையில் ரூ.4 குறைப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. மத்திய அரசுதான் தனது வரியை குறைத்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கான மாநிலங்களுக்கான வரியை குறைக்காத ஒரே அரசு திமுகதான்.

மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கவில்லை. முதியோர் ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை. மாணவர்களுக்கு கல்விக்கடன், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரத்து செய்யவில்லை. போக்குவரத்து உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கவில்லை. இவர்களை நம்பி வாக்களித்த அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

விடியல் தரப்போகுது என்று கூறி, ஆட்சிக்கு வந்த திமுக, மக்கள்பிரச்சினையில் கவனம் செலுத்தாத விடியாத அரசாகவே இருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் அரசுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி தலைமைவகித்தார். அவர் பேசியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலின்போது அளித்த 525 வாக்குறுதிகளில் ஒன்றிரண்டை தவிர, மற்ற எதையும் நிறைவேற்றவில்லை. குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத் தொகை, முதியோர் உதவித் தொகை ரூ.1,500ஆக உயர்த்தல், கல்விக் கடன் ரத்து, அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு என தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகளை கூறி, குறுக்குவழியில் திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது.

டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காததால், சரக்குபோக்குவரத்து கட்டணம் கடுமையாக உயர்ந்து விலைவாசி ஏற்றம்கண்டதால், மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

அம்மா சிமென்ட் ஒரு மூட்டை ரூ.190 முதல் ரூ.200 வரை அதிமுகஆட்சியில் அளித்தோம். தற்போது,வலிமை சிமென்ட் என்று பெயரிட்டு ரூ.400-க்கு ஒரு மூட்டை விற்கப்படுகிறது. இதனால், கட்டுமானத் தொழில் முடங்கியதால் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிர்வாக திறமையற்ற முதல்வராக ஸ்டாலின் இருப்பதால், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்கூட்டியே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பங்கேற்றார்.

வடசென்னை தெற்கு கிழக்குமாவட்டச் செயலாளர் டி.ஜெயக்குமார் ராயபுரம் பகுதியில் தனதுஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதேபோல, தமிழகம் முழுவதும் அதிமுக அமைப்பு ரீதியாக செயல்படும் 75 மாவட்டங்களின் தலைநகரங்கள், வருவாய் மாவட்டங்களிலும் மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x