Published : 17 Dec 2021 02:50 PM
Last Updated : 17 Dec 2021 02:50 PM

நெல்லை பள்ளி விபத்தில் பலியான 3 மாணவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின்

திருநெல்வேலி

திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், ”திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளியில் இன்று காலை 10.50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிப்பறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி டி.விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர்.சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் எம்.இசக்கி பிரகாஷ், எஸ்.சஞ்சய், ஷேக்கு அபுபக்கர் கித்தானி மற்றும் அப்துல்லா உள்ளிட்ட நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா பத்து லட்சம் ரூபாயும், காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x