Published : 17 Dec 2021 03:08 AM
Last Updated : 17 Dec 2021 03:08 AM

தேசிய இளைஞர் விழா கொண்டாடும் இடமாக புதுச்சேரி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி: ஆளுநர் தமிழிசை பெருமிதம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 2022-ம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் விழாவினை கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இணையவழியில் நேற்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமை தாங்கினார். மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை செயலர் உஷா சர்மா, இணை செயலர் நிதிஷ்குமார் மிஷ்ரா, துணை செயலர் பங்கஜ் குமார் சிங், புதுச்சேரி தலைமை செயலர் அஸ்வனி குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை முன்வைத்த கருத்துகளின் விவரம்: ஜனவரி12 முதல் 16 வரை நடைபெறும் தேசிய இளைஞர் விழாவை கொண்டாடுவதற்கான இடமாக புதுச்சேரி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. புதுச்சேரி வரலாறு மற்றும் பண்பாட்டு பெருமை வாய்ந்த மாநிலம் என்பதால் தேசிய இளைஞர் விழா இங்கே நடத்தப்படுவது பொருத்தமானதாகும்.

இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தையொட்டி கொண்டாடப் படும் தேசிய இளைஞர் விழாவில் தேசிய தலைவர்களோடு, உள்ளூர் தலைவர்களின் பெருமைகளையும், தமிழ் கலாச்சாரம், பண்பாடு, புதுச்சேரியின் வரலாறு ஆகியவற்றின் சிறப்புகளையும் வெளிக்கொண்டு வரும் வகையில் நிகழ்ச்சிகள் அமைய வேண்டும். மேலும், இளைஞர்களுக்கான வீர விளையாட்டுகள், யோகா போன்ற கலைகள், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நிகழ்ச்சிகள் அமைய வேண்டும்.

கரோனா பெருந்தொற்று காரணமாக அண்மையில் பெரிய விழாக்கள் ஏதும் கொண்டாடப்படவில்லை. புதுச்சேரியில் முதன் முறையாக கொண்டாடப்படும் தேசிய இளைஞர் விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையிலும், விழா குறித்த ஒரு ஆர்வத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தும் வகையிலும் அதற்கான லட்சனை மற்றும் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் உருவாக்கப்படுதல் வேண்டும். அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் ஆகியவற்றை ஈடுபடுத்த வேண்டும். மக்களிடையே விழா குறித்த தகவலை கொண்டு சேர்க்க வேண்டும். ஆகிய கருத்துக்களை முன்வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x