Published : 14 Dec 2021 02:53 PM
Last Updated : 14 Dec 2021 02:53 PM

அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயப்படுத்துவதை தடுக்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் எம்.பி. அன்பரசு தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதாகவும், அதை தடுப்பதற்கான சட்டவிதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை என சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா என்பவர் 2014ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

தந்தை மறைவிற்கு பிறகு இந்த வழக்கை மகன் ககன் சந்த் போத்ரா வழக்கை நடத்தி வருகிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இந்த சட்டவிதிமீறல்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறை கவனம் செலுத்தவில்லை என தெரிவித்ததுடன், வழக்கில் தமிழக டிஜிபி-யை 5- வது எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த விதிகளை முறையாக அமல்படுத்துவது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலக அல்லது டிஜிபி அலுவலக உயர் அதிகாரியிடமிருந்து விளக்கம் பெற்று தெரிவிக்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய அரசு மற்றும் மாநில அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக புகார் அளிப்பவர்கள் பாதிக்கப்படக்கூடாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும் தற்போது பதவியில் உள்ள எம்.பி.க்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகியோரின் வாகனங்களில் அரசு சின்னங்களை பயன்படுத்தலாம் என விதிகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி ஓய்வுபெற்ற பின்னரும் பயன்படுத்துவதாகவும், அரசின் கடைநிலை ஊழியர்கள் வரை பயன்படுத்துவதாக நீதிபதி சுட்டிக் காட்டினார். இவ்வாறு அனைவரும் பயன்படுத்தினால் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் எப்படி அந்த வாகனத்தை நிறுத்தவோ, விசாரிக்கவோ செய்வார்கள் என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார்.

அதனால், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகியோர் தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்ற செயல்பாடுகள் மீது கான்ஸ்டபிள் கூட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை எவ்வாறு அமல்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகளை தமிழக டிஜிபியும், சென்னை மாநகர காவல் ஆணையரும் வழங்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x