Published : 12 Dec 2021 03:08 AM
Last Updated : 12 Dec 2021 03:08 AM

கால்டாக்சிகளுக்கு கட்டண விதிமுறைகள் கொண்டுவரப்படுமா?- கூடுதல் கட்டண வசூலால் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சென்னை

தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கால் டாக்சிகள் இயக்கப்படுகின்றன. ஆனால் அடிக்கடி கட்டணம் உயர்த்தப்படுவதால், கட்டணம் தொடர்பாக விதிமுறைகளை அரசு கொண்டுவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகரமயமாக்கல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் போக்குவரத்து தேவையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பெரிய நகரங்களில் கால்டாக்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சென்னையில் முதல்முறையாக கடந்த 2001-ம்ஆண்டு கால்டாக்சி சேவை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சில ஆயிரம் கார்களே இயங்கின. தற்போது, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கால்டாக்சிகள் இயக்கப்பட்டு வரு கின்றன.

அடிக்கடி கட்டணம் உயர்வு

மக்கள் வசதியாக பயணம் செய்யும் வகையில் செல்போன் செயலிகள் மூலமும் வாகனங்களை அழைக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கார்களில் உள்ள வசதிகளுக்கு ஏற்றவாறு குறைந்தபட்சமாக 4 கி.மீ தொலைவுக்கு ரூ.150,ரூ.200, ரூ.280, ரூ.300 என வசூலிக்கப்படுகிறது. ஆனால், ஆட்டோக்களுக்கு உள்ளதுபோல், எந்த விதிமுறைகளும் கால்டாக்சிகளுக்கு வகுக்கப்படவில்லை. இதனால், கால்டாக்சிகளுக்கான கட்டணங்கள் அடிக்கடி உயர்த்தி வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறியதாவது:

சென்னை போன்ற நகரங்களில் மக்கள் வெளி இடங்களுக்குச் சென்று, வர கால்டாக்சிகள் வசதியாக இருக்கின்றன. ஆனால், கட்டணம் நிர்ணயிக்கப்படாததால் அடிக்கடி கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கின்றனர்.

கட்டண நிர்ணயம் அவசியம்

சென்னையை விட, இதர மாவட்டங்களில் இயக்கப்படும் கால்டாக்சிகளில் குறைந்தபட்சமாகவே ரூ.250 வரை வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, காத்திருப்பு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, கால்டாக்சிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து, பாதுகாப்பு அம்சங்களை உறுதிசெய்ய சிசிடிவி கேமராக்கள், ஜிபிஎஸ் வசதி, கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பது போன்ற பணிகளுக்கான விதிமுறைகளை தமிழக அரசு கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது:

சிறப்பு பெர்மிட், டிஜிட்டல் மீட்டர்

தமிழகத்தில் இயக்கப்படும் கால்டாக்சிகள் சுற்றுலா பெர்மிட்கொண்டுதான் இயக்கப்படுகின்றன. கால்டாக்சிகளுக்கு சிறப்பு பெர்மிட் வழங்கி, டிஜிட்டல் மீட்டரை பொருத்தி இயக்கினால், ஏராளமான மக்கள் நியாயமான கட்டணத்தில் பயணம் செய்யமுடியும். கால்டாக்சிகளுக்கு புதிய விதிமுறை கொண்டு வருவது பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கிறது. இந்த தொழிலை நம்பி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

எனவே, பொதுமக்கள் மற்றும்மோட்டார் வாகன தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கால்டாக்சிகளுக்கு தமிழக அரசு விதிமுறைகளை வகுத்து அமல்படுத்த வேண்டும். குறிப்பாக, கால்டாக்சிகளுக்கு தனி உரிமம், கட்டண நிர்ணயம்,ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களை நிர்ணயிக்க வேண்டுமென நாங்கள்தொடர்ந்து வலியுறுத்தி வருகி றோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x