Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உறுதி

சென்னை

தமாகா இலக்கிய அணி சார்பில், பாரதியாரின் 140-வது பிறந்த நாள் விழா சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

பாரதியார் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்இழந்த முப்படை தளபதி பிபின்ராவத்துக்கும் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, கவிஞர் ஏர்வாடிஎஸ்.ராதாகிருஷ்ணன், திரைப்படப் பாடலாசிரியர் விவேகா, இசையமைப்பாளர் அமுதபாரதி ஆகியோருக்கு, பாரதியார் விருது, பதக்கம் மற்றும் பொற்கிழியை வழங்கினார்.

பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது. போட்டியிடும் இடங்கள் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசிக்க, வரும் 18-ம்தேதி கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பெய்த தொடர் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து நேற்று முன்தினம் பிரதமரை நேரில்சந்தித்து விளக்கினேன். பாராளுமன்றத்திலும் இதுகுறித்து பேசி, நிவாரண உதவி கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளேன்.

மீண்டும் வேளாண் சட்டம்

வேளாண் சட்டத்தை பெரும்பான்மையான கட்சிகள், விவசாயிகள் ஏற்றுக்கொண்ட போதும், சில மாநில விவசாயிகள் ஏற்றுக்கொள்ளாமல் போராட்டம் நடத்தியதால், ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், அனைத்து தரப்பு விவசாயிகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மீண்டும் வேளாண் சட்டம் கொண்டு வரப்படும் என நம்புகிறேன்.

ஒமைக்ரான் தொற்று குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு மீது மக்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. திமுக அரசு மக்களை ஏமாற்றக் கூடாது”.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநிலப் பொதுச் செயலர்கள் விடியல் எஸ்.சேகர், ராஜம் எம்.பி.நாதன், இலக்கிய அணி தலைவர் கே.ஆர்.டி.ரமேஷ், கொள்கை பரப்புச் செயலர் பொன்.வில்சன்,கண்ணதாசன் பதிப்பகம் உரிமையாளர் காந்தி கண்ணதாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x