Published : 05 Mar 2016 10:17 AM
Last Updated : 05 Mar 2016 10:17 AM

மதிமுகவில் இருந்து விலகி வந்த 7 பேர் திமுகவில் விருப்ப மனு தாக்கல்

கடந்த ஆண்டின் இறுதியில் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் வரிசையாக திமுக-வில் இணைந்தனர்.

இவர்களில் தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் வழக்கறிஞர் ஜோயலுக்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பதவியும் மாநில மகளிரணி செயலாளர் குமரி விஜயகுமாருக்கு மகளிரணி துணைச் செய லாளர் பதவியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், மதிமுக வரவுகளில் பெரும்பகுதியினர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு, திமுக-வில் விருப்ப மனு கொடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்கு முன்னாள் மதிமுக மாநில பொருளாளர் மாசிலாமணியும் நெல்லை, கடையநல்லூர் தொகுதிகளுக்கு நெல்லை புறநகர் மாவட்ட முன்னாள் மதிமுக செயலாளர் சரவணனும் நெல்லை தொகுதிக்கு நெல்லை மாநகர் மாவட்ட முன்னாள் மதிமுக செயலாளர் பெருமாளும் நாகர்கோவில் தொகுதிக்கு குமரி மாவட்ட முன்னாள் மதிமுக செயலாளர் தில்லை செல்வமும், திருச்செந்தூர், வைகுண்டம், தூத்துக்குடி தொகுதிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மதிமுக செயலாளர் ஜோயலும் விருப்ப மனு அளித்துள்ளனர்.

இதேபோல், மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் மதிமுக செயலாளர் சரவணன் திருமங்கலத்துக்கும் கரூர் மாவட்ட மதிமுக முன்னாள் செயலாளர் பரணி மணி கரூருக்கும் சேலம் மாவட்ட முன்னாள் மதிமுக செயலாளர் தாமரைக் கண்ணன் சேலம் மேற்கு தொகுதிக்கும் விருப்ப மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் மதிமுக செயலாளர் பாலவாக்கம் சோமு, மதிமுக-வின் முன்னாள் மாநில மகளிரணி செயலாளர் குமரி விஜயகுமாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை என்று தெரிகிறது.

இதுகுறித்து திமுக இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் ஜோயலிடம் பேசியபோது, திமுக-வில் இணைந்த அத்தனை பேருக்கும் நாங்கள் கேட்காமலேயே கட்சியில் மாநிலப் பொறுப்புகளை வழங்கி கவுரவித்திருக்கிறார்கள். இப்போது, நாங்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறோம். தலைமை அனுமதித்தால் தேர்தலில் போட்டியிடுவோம். இல்லாவிட்டால் திமுக-வின் லட்சோப லட்சம் தொண்டர்களில் ஒருவராக திமுக-வின் வெற்றிக்கு உழைப்போம்’’ என்றார்.

வன்னியர்கள் மெஜாரிட்டியாக உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் திமுக-வில் வன்னியருக்கு முக்கியத்துவம் இல்லை என்ற ஆதங்கம் உள்ளது. திமுக-வில் விழுப்புரம் மத்திக்கு பொன்முடியும், தெற்குக்கு அங்கயற்கண்ணியும், வடக்கில் மஸ்தானும் மாவட்டச் செயலாளர்களாக உள்ளனர். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாசிலாமணி 1989-ல் திமுக எம்.எல்.ஏ-வாக இருந்தவர் என்பதாலும் மருத்துவர் ராமதாஸின் உறவினர் என்பதாலும் வன்னியர் ஓட்டுகளை ஈர்க்கும் வகையில் மாசிலாமணிக்கு இம்முறை வாய்ப்பளிக் கப்படலாம் என்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக-வுக்கு தூதுவிட்டு காத்திருந்தார் என்பதால் அவர் மீதும் மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி மீதும் அதிருப்தியில் இருக்கிறார் ஸ்டாலின். இவர்களுக்கு செக் வைப்பதற்காகவே ஜோயலுக்கு பதவியும் போட்டியிட வாய்ப்பும் கிடைக்கும் என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x